Site icon Tech Tamilan

What is AGI in Tamil? Artificial General Intelligence

what is agi in tamil

what is agi in tamil

உலகம் புதுப்புது தொழில்நுட்பங்களை கண்டுகொண்டு இருக்கிறது. அப்படி, அதிகமாக பேசப்படும் ஒரு தொழில்நுட்பம் தான் AI அதாவது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், செயற்கை நுண்ணறிவு என தமிழில் மொழி பெயர்க்கலாம். ஆனால், அதனையும் விட ஒரு தொழில்நுட்பம் பற்றி உலகமே பேசிக்கொண்டிருக்கிறது. உங்களுக்கு தெரியுமா? அதுதான் Artificial General Intelligence, சுருக்கமாக AGI. 

உலகில் தலைசிறந்த நிறுவனங்கள் பலவும் AGI தொழில்நுட்பத்தில் மூழ்கி இருக்கின்றன. இதற்கு மிக முக்கியக்காரணம், AGI தொழில்நுட்பத்தை உருவாக்கக்கூடிய நிறுவனம் ஒட்டுமொத்த தொழில்நுட்ப உலகையும் ஆளும் திறன் கொண்டதாக இருக்கும். அதேபோல, AGI வெற்றிகரமாக உருவாகும் பட்சத்தில் Generative AI [Chat GPT, Gemini] ஏற்படுத்திய தாக்கத்தை விடவும் பல மடங்கு தாக்கம் ஏற்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 

உங்களுக்கு Artificial General Intelligence என்றால் என்ன என்பது குறித்து அறிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கும் என நம்புகிறேன். அப்படியானால், இந்தக்கட்டுரை உங்களுக்கானது. படியுங்கள், முழுமையாக AGI பற்றி தமிழில் தெரிந்துகொள்ளுங்கள்.

What is artificial general intelligence?

மனிதர்கள் போன்றதொரு புத்திசாலித்தனத்துடன் பல்வேறு வேலைகளை தானாகவே கற்றுக்கொண்டு செய்யக்கூடிய ஒரு மென்பொருள் [Software] தான் Artificial general intelligence (AGI). இப்போதுள்ள AI மென்பொருள்களைப் போல ஒரு வேலையை செய்திட பயிற்றுவிக்கவோ அல்லது உருவாக்கவோ தேவை இல்லை. 

இன்னும் நீங்கள் இதனை சுலபமாக விளங்கிக்கொள்ள இந்த உதாரணம் பயன்படும். ஒரு AI மென்பொருளுக்கு தரவுகளை ஆராய்ந்து ஒரு PPT உருவாக்கத் தெரிகிறது என வைத்துக்கொள்வோம். அந்த குறிப்பிட்ட AI ஆல், தேவையான Image ஐ உருவாக்க முடியுமா என்றால் முடியாது. ஏனெனில் அந்த AI  PPT உருவாக்க மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டது. ஒருவேளை, குறிப்பிட்ட அந்த AI புரோகிராமை Image ஐ உருவாக்க பயிற்றுவிக்க முடியும். ஆனால், இதனை நாம் தான் செய்திட வேண்டும். 

ஆனால், AGI புரோகிராம் அதுவாகவே பல்வேறு விசயங்களை கற்றுக்கொள்ளும். PPT உருவாக்க, Image உருவாக்க வேண்டும் என்கிற தேவை இருந்தால் அதுவாகவே Image ஐ உருவாக்க கற்றுக்கொள்ளும். எப்படி மனிதர்கள் தங்களுக்கு தேவையான விசயங்களை தாங்களாகவே கற்றுக்கொள்கிறார்களோ அப்படியே AGI புரோகிராமும் கற்றுக்கொள்ளும். 

நீங்கள் Iron Man திரைப்படம் பார்த்து இருப்பீர்கள் அல்லவா, அதிலே ஹீரோவிற்கு உதவியாக ஒரு ரோபோ இருக்குமே, அந்த JARVIS தான் AGI க்கு மிகச்சிறந்த உதாரணம். அதிலே, ஹீரோவிற்கு உதவியாக அவரது கட்டளை எதுவும் இல்லாமலே பல்வேறு வேலைகளை அது செய்து வைத்திருக்கும். அப்படி, தானாகவே செயல்படும் ஒரு AI புரோகிராம் தான் AGI புரோகிராம். 

இப்போது உங்களுக்கு AGI பற்றி நன்றாக புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

Artificial Intelligence vs Artificial General Intelligence

இப்போது மனிதர்கள் வெற்றிகரமாக உருவாக்கி இருப்பது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் [Artificial Intelligence] தான். அடுத்தகட்டமாக, பல நிறுவனங்கள் தங்களது ஆராய்ச்சியை Artificial General Intelligence நோக்கி நகர்த்தி இருக்கிறார்கள். இதுவரையிலும் Artificial General Intelligence ஐ எந்த ஒரு நிறுவனமும் நெருங்கவில்லை. ஆனால், Google,Microsoft, OpenAI போன்ற நிறுவனங்கள் இதற்கான ஆய்வுகளில் தீவிரமாக களம் இறங்கி உள்ளன. 

இப்போது, பல நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் நடக்கும் வேலைகளை சுலபமாக்க AI புரோகிராம்களை உருவாக்கி வைத்துள்ளன. உதாரணத்திற்கு, ஒரு நிறுவனம் அதிக அளவிலான தரவுகளில் இருந்து தேவைப்படும் முடிவுகளைப் பெற AI புரோகிராம்களை உருவாக்கி வைத்திருக்கும். அந்த AI புரோகிராம் குறிப்பிட்ட அந்த வேலையை செய்வதற்காக புரோகிராம் செய்யப்பட்டு இருக்கும், அதேபோல அதிக அளவிலான தரவுகளை கொடுத்து குறிப்பிட்ட அந்த வேலையை சரியாக செய்வதற்காக மேம்படுத்தப்பட்டு இருக்கும். இதில் ஒவ்வொரு நிலையிலும் மனிதர்களின் ஈடுபாடு என்பது அவசியம். 

இதற்கு முற்றிலும் மாறானது தான் AGI தொழில்நுட்பம். மனிதர்களின் தயவு எதுவும் இன்றி புதுப்புது விசயங்களை தானாகவே கற்றுக்கொள்ளும் திறன் கொண்ட ஒரு தொழில்நுட்பம் இந்த AGI. ஒரு AGI புரோகிராமால் ஒரு பிரச்சனையை தானாகவே சரி செய்துகொள்ள முடியும். இதுவரைக்கும் முயற்சி என்கிற அளவில் தான் AGI தொழில்நுட்பம் இருக்கிறது.

Artificial General Intelligence Risks and Opportunities

நாம் இப்போது AI தொழில்நுட்பத்தின் ஆரம்ப நிலையில் இருக்கிறோம். இப்போதே, மனிதர்கள் செய்துவந்த பல்வேறு வேலைகளை AI புரோகிராம்கள் செய்திட ஆரம்பித்துவிட்டன. இதன் பாதிப்பை சொல்ல வேண்டும் என்றால், மிகப்பெரிய நிறுவனங்கள் நடத்தி வந்த BPO, Customer Care போன்றவை இல்லாமலே போய்விட்டன. 

நாம் ஒரு முழுமையான AI தொழில்நுட்பத்தை அடைய இன்னும் 50 ஆண்டுகால ஆய்வுகள் தேவைப்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். முழுமையான AI என்பது AGI தொழில்நுட்பம் தான். 

சாமானிய மனிதன் ஒரு வேலையை செய்திட எப்படி தானாகவே கற்றுக்கொள்ள முடிகிறதோ அதனைப் போலவே பல்வேறு விசயங்களை தானாகவே கற்றுக்கொள்ளும் திறன் கொண்ட ஒரு புரோகிராம் தான் AGI. ஆனால், அது எதனை கற்றுக்கொள்ளும்? தீய விசயங்களை கற்றுக்கொண்டால் என்னாவது? என்பது போன்ற பல கேள்விகள் எழவே செய்கின்றன. 

AGI மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டால் அதனால் பல நன்மைகளும் இருக்கவே செய்யும். உதாரணத்திற்கு, ஒரு நிறுவனம் தனது தகவல்களை ஹேக்கர்ஸ் இடம் இருந்து காப்பதற்கு பல நபர்களை வேலைக்கு அமர்த்துகிறது. அவர்கள் புதுப்புது விசயங்களை கற்றுக்கொள்ள செலவும் செய்கிறது. ஆனால், ஒரு AGI புரோகிராம் இருந்தால் போதும் நிறுவனத்தின் பாதுகாப்பு சிறப்பாக இருக்கும். புதிய யுக்திகளை அதுவே கற்றுக்கொண்டு பாதுகாப்பு செயல்பாடுகளை மேம்படுத்திவிடும். 

மனிதர்கள் கற்றுக்கொள்வதில் எல்லை என்பது உண்டு. ஆனால், ஒரு மென்பொருள் அளவில்லாமல் கற்க முடியும். அப்படி கற்றுக்கொள்ளும் போது பல நீண்ட கால பிரச்சனைகளுக்கு அது தீர்வுகளை எளிதாக வழங்கும். குறிப்பாக, விண்வெளி, மருத்துவம் போன்ற கடினமான துறைகளில் AGI இன் பங்களிப்பு மிகவும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். 

துவக்கத்தில் மனிதர்களால் வழங்கப்படும் கட்டளை [rule-based learning system] அடிப்படையிலேயே AGI புரோகிராம் தனது திறனை வளர்த்துக்கொள்ளும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால், அதன் கற்றல் திறன் தொடர்ச்சியாக அதிகரிக்கும் போது அதன் மீது மனிதர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடு குறையும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 

ஒருநாள், மனிதர்கள் தான் தனக்கு எதிரி என ஒரு AGI நினைத்தால் என்னவாகும்? மனிதர்களுக்கு எதிராக வளங்களை கைப்பற்ற அது ஆசைப்பட்டால் என்னவாகும்? 

இப்படி ஏகப்பட்ட கேள்விகளும் AGI குறித்து இருக்கின்றன. இதற்கு விஞ்ஞானிகள் தான் பதில் சொல்ல வேண்டும்.

மேலும் இது மாதிரியான தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை படிக்க நமது WhatsApp Channel இல் இணைந்திடுங்கள்.

TECH TAMILAN

Exit mobile version