Site icon Tech Tamilan

டிக்டாக்கை மிரட்டும் டிரம்ப் | என்ன நடக்கிறது அமெரிக்காவில்?

இந்தியாவைத்தொடர்ந்து அமெரிக்காவிலும் தடை செய்யப்பட இருக்கும் டிக்டாக்

Tiktok Ban

இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது எனக்கூறி டிக்டாக் உள்ளிட்ட பல சீன ஆப்கள் இங்கே தடை செய்யப்பட்டன. இதே போன்று அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்யப்படுவதற்கான நடவெடிக்கையை துவங்கினார் டிரம்ப். இதனை எதிர்த்து டிக்டாக் நிர்வாகம் நீதிமன்றம் சென்றுள்ளது.

ஆகஸ்ட் 07 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாக ரீதியிலான உத்தரவு ஒன்றில் கையெழுத்து இட்டார். அதில் “அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்  டிக்டாக் மற்றும் வீ சாட் உள்ளிட்ட சீன ஆப்களை தடை செய்வதற்கான நடவெடிக்கைகள் துவங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது”. அதிபர் டிரம்ப்பின் தடை உத்தரவை எதிர்த்து டிக்டாக் நிறுவனத்தின் தாய் நிறுவனமாக இருக்கக்கூடிய ByteDance நீதிமன்றம் செல்வோம் என ஏற்கனவே தெரிவித்து இருந்தது. அதன்படி தற்போது நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளது.

அமெரிக்கா – சீனா வர்த்தகப்போர்

ஏற்கனவே இந்திய அரசு டிக்டாக் உள்ளிட்ட சீன ஆப்களை தடை செய்யும் போதும், தற்போது அமெரிக்கா அதிபர் தடை  செய்வதற்கு தயாரான போதும் டிக்டாக் ஆப்பில் இருந்து பயனாளர்களின் தகவல்கள் சீன அரசுக்கோ அல்லது வேறு நிறுவனங்களுக்கோ கசியவிடப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதை தெரிந்துகொண்டால் டிக்டாக் குறிவைக்கப்படுவதற்கான காரணத்தை அறிந்துகொள்ள முடியும். 

 

அமெரிக்காவில் டிக்டாக் ஆப் தடை செய்யப்படக்கூடும் என பேசப்பட்டபோதே டிக்டாக்கின் அமெரிக்க உரிமையை வாங்குவதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சார்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. ByteDance நிறுவனம் டிக்டாக்கின் அமெரிக்க உரிமையை விட்டுத்தர அண்மையில் மறுப்பு தெரிவித்து இருந்தது. இதனை அடுத்துதான் அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த 90 நாட்களுக்குள் டிக்டாக் மற்றும் வீ சாட் உள்ளிட்ட செயலிகள் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தார். 

 

இந்தியாவில் டிக்டாக் ஆப் தடை செய்யப்படுவதற்கு சொல்லப்பட்ட அதே காரணங்களைத்தான் அமெரிக்காவும் கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருவகையில் சீனாவின் மீதான வர்த்தகப்போரின் ஒரு பகுதியாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. 

டிக்டாக் தடை அரசியல் காரணங்கள்

டிக்டாக் உள்ளிட்ட சீன ஆப்கள் மீது விதிக்கபட்ட தடை உத்தரவுக்கு அரசியல் காரணங்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அண்மையில் வரவிருக்கும் அமெரிக்க தேர்தலில் தான் சீனாவிற்கு எதிராகவும் அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் இருப்பதை கட்டிக்கொள்ளவே டிரம்ப் இத்தகைய நடவெடிக்கைகளில் இறங்கி இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. 

 

அமெரிக்கா சார்பில் டிக்டாக் தடை குறித்து கூறும்போது “கிட்டத்தட்ட 8 கோடி பயனாளர்கள் டிக்டாக்கிற்கு இருக்கிறார்கள். அமெரிக்க அரசு ஊழியர்கள் எங்கு செல்கிறார்கள் என்பது உள்ளிட்ட அவர்களது தரவுகளை சேகரித்து அதனைக்கொண்டு அவர்களை மிரட்டவும் அமெரிக்க நிறுவனங்களை உளவு பார்க்கவும் டிக்டாக் செயலியை சீன அரசு பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. தொடர்ச்சியாக அதிகரித்து வரும் டிக்டாக் செயலியின் பயன்பாடு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது எனவும் கூறப்படுகிறது” 

 

பைட்டான்ஸ் நிறுவனத்தின் சார்பாக “நாங்கள் ஓராண்டுக்கும் மேலாக அமெரிக்க அரசை தொடர்புகொள்ள முயற்சித்து தோற்றுப்போனோம். டிக்டாக் மற்றும் அதன் பயனாளர்கள் தவறான காரணங்களுக்காக தடை செய்யப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. ஆகவே இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லவிருக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மீண்டும் இந்தியாவில் வரப்போகிறதா டிக்டாக்? என்ன நடக்கிறது?

டிக்டாக் போனால் என்ன இருக்கிறது “இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்”



Get updates via whatsapp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version