டிக்டாக் ஆப்பிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும் என பல டிக்டாக் பிரபலங்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அதற்கான வாய்ப்பு இருக்கிறதா? தடை நீக்கப்படுமா?
அண்மையில் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றிக்கு ஆபத்து இருக்கிறது என்ற காரணத்தால் 59 சீன ஆப்கள் தடை செய்யப்பட்டது. இதில் டிக்டாக், UC பிரவுசர், ES File Explorer, Shareit போன்ற பல ஆப்களும் அடக்கம்.
இந்தியாவில் அதிக பயலாளர்களை கொண்டிருக்கும் டிக்டாக் ஆப்பிற்கு தடை விதித்தவுடன் அதில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களை கொண்டிருக்கும் பலர் டிக்டாக் ஆப்பிற்கு விதிக்கப்பட்ட தடையை இந்திய அரசு நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். சிலர் விரைவில் டிக்டாக் ஆப்பிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படலாம் எனவும் தெரிவித்தனர். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது? டிக்டாக் இந்திய அரசிடம் முறையிட்டு இருக்கிறதா? மீண்டும் வரப்போகிறதா டிக்டாக்? வாருங்கள் பார்க்கலாம்.
இந்திய அரசு டிக்டாக் ஆப் உட்பட 59 சீன ஆப்களை இந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் இருக்கிறது என்பதனை காரணம் காட்டி தடை செய்திருக்கிறது. இப்படி தடை செய்யப்பட்டவுடன் டிக்டாக் தரப்பில் இருந்து இந்திய அரசுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. அதில் டிக்டாக் இன் தலைமை அதிகாரி கெவின் மேயர் குறிப்பிட்டுள்ளதாவது “டிக்டாக் ஆப்பானது சீனாவில் இல்லை மாறாக சீனாவை சேர்ந்த ByteDance நிறுவனத்திற்கு டிக்டாக் சொந்தமானது. டிக்டாக் உலக சந்தையில் கால்பதிப்பதற்காக எப்போதும் பெய்ஜிங்கில் இருந்து தூரமாக இருப்பதையே விரும்புகிறோம்.
இதுவரைக்கும் சீன அரசு எங்களிடம் இந்திய பயனாளர்களின் தகவல்களை கேட்டது கிடையாது. அப்படிக்கேட்டாலும் நாங்கள் கொடுக்கப்பபோவதும் கிடையாது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் இந்திய பயனாளர்களின் தகவல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் எங்களுக்கும் அக்கறை இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
டிக்டாக் ஆப் தடை செய்யப்பட்டவுடன் பிற இந்திய ஆப்களில் பயனாளர்களின் எண்ணிக்கை கூட ஆரம்பித்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில், டிக்டாக் இந்திய பகுதியில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் நேரடி மற்றும் மறைமுகமாக கிட்டத்தட்ட 3500 பணியாளர்கள் பணியாற்றுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ள கெவின் மேயர் இந்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறியிருக்கிறார்.
இந்திய பயனாளர்களின் தகவல்கள் இந்த சீன ஆப்கள் மூலமாக கசிய வாய்ப்பிருப்பதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதனால் தான் இந்த ஆப்கள் இந்திய அரசால் தடை செய்யப்பட்டு இருக்கின்றன. இதுகுறித்து குறிப்பிட்டுள்ள மேயர், தற்போதைக்கு இந்திய பயலாளர்களின் தகவல்கள் அனைத்தும் சிங்கப்பூரில் இருக்கும் சர்வரில் தான் சேமிக்கப்படுகிறது, இந்தியாவில் சர்வர்களை அமைக்கும் பணிகளிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம் என குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்திய அரசு வட்டாரங்களில் டிக்டாக் ஆப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, தற்போதைக்கு அதற்கு வாய்ப்பு இல்லையென்றே தெரிவித்து இருக்கிறார்கள். ஒருவேளை டிக்டாக் உள்ளிட்ட ஆப்கள் நீதிமன்றத்தில் முறையிட்டால் கூட “இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருக்கிறது” என்ற காரணத்தால் இந்த ஆப்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்பதனால் நீதிமன்றம் தடையை அவ்வளவு எளிதில் நீக்கவும் வாய்ப்பில்லை என்கிறார்கள்.
டிக்டாக் ரசிகர்கள் பலர் தடை நீங்கும் என எதிர்பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இன்னும் சில வாரங்களில் இதற்கான முடிவுகள் தெரிந்துவிடும்.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.