ஒரு கம்ப்யூட்டர் வைரஸ் புரோகிராம் மூலமாக நியூக்கிளியர் தயாரிப்பையே முடக்க முடியும் என்பதை நிகழ்த்திக்காட்டிய வைரஸ் தாக்குதல் “Stuxnet”. ஈரான் அணு ஆயுத செறிவூட்டலை தடுத்து நிறுத்திய மிகப்பெரிய ஹேக்கிங் இதுதான்.
பொதுவாக ஹேக்கிங் என்றால் ஒரு வைரஸ் புரோகிராமை ஒரு கணினிக்குள் அனுப்பி அந்த கணினியின் செயல்பாட்டை முடக்குவது அல்லது அதிலிருக்கும் தகவல்களை திருடுவது அல்லது அந்த தகவல்களை என்கிரிப்ட் செய்து பணம் கேட்டு மிரட்டுவது என்றுதான் நாம் அறிந்திருப்போம். ஆனால் முதல் முறையாக கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும் இயந்திர அமைப்புகளின் [PLC] செயல்பாட்டை மாற்றி அமைத்து அவற்றை அழித்தொழிக்கும் வேலையை செய்கின்ற சிறப்பான வைரஸ் தாக்குதல் 2010 இல் நடந்தேறியது.
மிகச்சிறந்த ஹேக்கிங் என்று வரிசைப்படுத்தினால் இந்த வைரஸ் தாக்குதலைத்தான் முதலிடத்தில் வைக்க முடியும். அந்த அளவிற்கு மிகுந்த நுட்பத்துடன் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டிருந்தது.
Ethical Hacker ஆக வேண்டுமா? நீங்கள் செய்திட வேண்டியது இதுதான்
Stuxnet எப்படி செயல்படும்?
Stuxnet என்பது ஒரு வைரஸ் புரோகிராம். இதன் பணி கணினியை தாக்குவது மட்டுமில்லாமல் அதனுடன் சேர்ந்திருக்கக்கூடிய இயந்திர பாகங்களையும் பாதிக்கும் வல்லமை உடையது. குறிப்பாக அணு ஆயுதங்களுக்கு சக்தி அளிக்கக்கூடிய செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் centrifuges ஐ தாக்கி அதனை பாதிக்கும் வல்லமை கொண்டது இந்த வைரஸ்.
இந்த வைரஸ் புரோகிராம் ஒரு கணினியை அடையும் போது அந்த கணினியை தாக்காது. மாறாக அந்த கணினியுடன் யுரேனியம் செறிவூட்டலுக்கு உதவிகரமாக இருக்கக்கூடிய கருவி ஏதாவது இந்த கணினியுடன் இணைந்து இருக்கிறதா என பார்க்கும். அப்படி ஏதாவது இருந்தால் வேலையை துவங்கிவிடும். இல்லையேல் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதன் காரணமாக வேறெந்த கணினிகளிலும் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தாது.
உதாரணத்திற்கு,
1. ஒரு கணினியில் இந்த வைரஸ் USB கொண்டு ஏற்றப்படும்.
2. ஏற்கனவே புரோகிராமில் பதிவு செய்யப்பட்ட மெஷின்களுடன் இந்தக்கனிணி தொடர்பு வைத்திருக்கிறதா என தேட ஆரம்பிக்கும்.
3. அப்படி மெஷின்கள் இல்லையெனில் இந்த வைரஸ் அமைதியாக இருக்கும். இன்டர்நெட் உடன் இணையும் போது புதிய வெர்சன்கள் இருந்தால் தானாகவே டவுன்லோடு ஆகும்
4. ஒருவேளை அந்த கணினியுடன் குறிப்பிட்ட மெஷின்கள் இணைக்கப்பட்டு இருந்தால் வைரஸ் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். குறிப்பிட்ட அந்த மெஷின்களை ஒருபுறம் பாதிக்கும், புரோகிராமில் இருக்கும் இன்னொரு பகுதி மெஷினில் ஏற்படும் பாதிப்பை வெளியில் இருப்பவர்களுக்கு தெரியாத விதமாக மறைக்கும்.
5 . கணினியுடன் இணைந்திருக்கும் மெஷின்களை முழுவதுமாக கட்டுப்படுத்தி அவற்றை தொடர்ச்சியாக செயலிழக்க செய்துகொண்டே இருக்கும்.
6. பாதிக்கப்பட்ட மெஷின்களை ஆராய்கிறவர்களால் சரியான காரணங்களை பெற முடியாதவாறு இந்த வைரஸ் புரோகிராம் பல்வேறு தவறான காரணங்களை திட்டமிட்டே பதிவு செய்துவிடும்.
Stuxnet, யார் இதை உருவாக்கியவர்கள்?
இந்த Stuxnet வைரஸ் புரோகிராம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய புலனாய்வு நிபுணர்களால் உருவாக்கப்பட்டது. இது ஜார்ஜ் டபிள்யு புஷ் காலத்தில் துவங்கி ஒபாமா ஆட்சியிலும் தொடர்ந்தது. இந்த வைரஸ் புரோகிராம் “Operation Olympic Games” என பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டுவந்தது. இந்த வைரஸ் புரோகிராமை உருவாக்கியது யார் என்பதும் இதற்கு பின்னால் எந்தெந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலை செய்தார்கள் என்பது பற்றிய தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டு இருக்கிறது.
இருந்தாலும் 2011 ஆம் ஆண்டு இஸ்ரேலிய பாதுகாப்பு தலைமை அதிகாரி பதவியை விட்டு செல்லும்போது அதனை கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்ட வீடியோவில் Stuxnet இவரது மேற்பார்வையில் திறம்பட உருவாக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வைரஸ் புரோகிராம் உருவாக்கத்தில் ஈடுபட்ட தனி நபர்கள் பற்றிய தகவல்கள் எங்குமே இல்லை. இருந்தாலும் Kaspersky Lab ஆராய்ந்ததில் உலகில் இருக்கும் சிறந்த திறமையாளர்களில் 10 பேர் இணைந்து 2 முதல் 3 ஆண்டுகள் கடினமாக உழைத்துதான் இந்த வைரஸ் புரோகிராமை உருவாக்கி இருக்க வேண்டும் என கணித்து இருக்கிறார்கள்.
இந்த வைரஸ் புரோகிராம் உருவாக்கப்பட காரணம் என்ன?
வேறொன்றும் இல்லை, நேரடியான தாக்குதலை தவிர்த்து போர் சூழல் உருவாவதை தடுப்பது தான் இந்த வைரஸ் புரோகிராம் உருவாக்கப்பட்ட காரணம். ஈரான் தொடர்ச்சியாக அணு ஆயுத தயாரிப்பில் முனைப்பு காட்டுவதாக செய்திகள் வந்துகொண்டே இருந்தன. இஸ்ரேல் நேரடியாக ஏவுகணைகளை அனுப்பி அந்த தளங்களை அழிக்க முயற்சி செய்யலாம். ஆனால் அது பிராந்தியத்தில் போர் சூழலை ஏற்படுத்தி விடும். ஆகையால் தான் இத்தகைய மறைமுக தாக்குதலை உருவாக்க இரண்டு நிர்வாகங்களும் முடிவு செய்தன.
அதுவரைக்கும் இப்படியொரு ஹேக்கிங் சாத்தியம் என்பதனை எவரும் நினைத்துபார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அதனை நிகழ்த்திக்காட்டி சாதித்தார்கள். ஆனால் இந்த வைரஸ் புரோகிராம் கண்டறியப்பட்ட பிறகு ஈரான் மற்றும் மேற்குலக நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்த வைரஸ் தாக்குதல் குறித்த டாகுமெண்டரி திரைப்படம் Zero Days 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.
Read More :23 வயதில் 88 லட்சம் சம்பாதித்த இந்திய ஹேக்கர் | சிவம் வசிஷ்ட் | Shivam Vashist
எங்களுடைய பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து இதுபோன்ற தொழில்நுட்பம் சார்ந்த விசயங்களை தெரிந்துகொள்ளுங்கள், வாட்ஸ்ஆப்பில் பெற அந்த பட்டனை கிளிக் செய்து இணைந்திடுங்கள்
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.