ECommerce
E-Commerce என்பது பலரும் ஆர்வத்தோடு செய்திடும் பிசினஸ். அதிலே நீங்கள் வெற்றியடைய வேண்டும் என்றால் நீங்கள் எந்தப்பொருளை விற்பனைக்கு எடுத்துக்கொள்ளப்போகிறீர்கள் என்பதும் முக்கியம். நீங்கள் எப்படி பொருளை தேர்வு செய்ய வேண்டும் என்பதை இங்கே கற்றுக்கொள்ளுங்கள்.
இ-காமர்ஸ் என்பது பிரபலமான, லாபம் தரக்கூடிய ஒரு தொழிலாக மாறிவருகிறது. இதனால் இ காமர்ஸ் பிசினஸில் தொடர்ச்சியாக பலரும் இறங்கி வருகிறார்கள். ஆனால், அனைவருக்குமே லாபம் கிடைக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படி சிலர் இதிலே தோற்றுப்போக மிக முக்கியக்காரணம், எந்தப்பொருளை விற்பனை செய்யப்போகிறோம் என்பதிலே பலர் சரியான முடிவுகளை எடுக்காமல் போவதனால் தான் என தெரிய வருகிறது. அப்படி இ காமர்ஸ் பிசினஸில் புதிதாக இறங்கக்கூடிய ஒருவர் விற்பனை பொருளை தேர்ந்தெடுக்க சில வழிமுறைகளை இங்கே தருகிறோம். இவை உங்களுக்கு சிறிய புரிதலை ஏற்படுத்தலாம்.
இ-காமர்ஸ் என்றால் என்ன? இந்தியாவில் இ-காமர்ஸ் பிசினஸில் ஈடுபடுவது எப்படி?
1. ஆய்வு செய்திட வேண்டியது அவசியம்
முதலில் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், எல்லா பொருள்களும் ஒரே மாதிரியானவை அல்ல என்பதைத்தான். ஒவ்வொரு பொருளுக்கும் வாடிக்கையாளரின் விருப்பம், அதிகரிக்கும் விலை, ஷிப்பிங் கட்டணம் என பல வேறுபாடுகள் உண்டு. இவை அனைத்தையும் கணக்கிலே கொண்டு விற்பனைக்கான பொருளை தேர்ந்தெடுத்தால் தான் லாபம் ஈட்ட முடியும்.
ஒரு பொருளை தேர்ந்தெடுக்க வேண்டும், அந்தப்பொருளை நாம் குறைந்த விலையில் இறக்குமதி செய்திட வாய்ப்பு இருக்க வேண்டும், அதனை மக்கள் வாங்க வேண்டும், பிறகு தான் நமக்கு லாபம் என்பதே. ஆகவே, வெறுமனே ஏதோ ஒரு பொருளை வாங்கி ஆன்லைனில் விற்பனை செய்வது என்பது இயலாத காரியம். ஆகவே, கொஞ்சம் ஆராய்ச்சி செய்திடுங்கள்.
2. வாடிக்கையாளரின் நெடுநாள் பிரச்சனையை தீர்க்கவும்
விற்பனையாளர்கள் எப்போதும் வாடிக்கையாளர்களின் மனநிலையில் இருந்தே சிந்திக்க வேண்டும். எப்போதும் வாடிக்கையாளர்கள் எந்தமாதிரியான பொருள்களை வாங்க விரும்புவார்கள் என்றால் அவர்களது வேலையை எளிதாக்கும் அல்லது அவர்களது பிரச்சனைகளை சரி செய்திடும் பொருள்களையே வாங்க விரும்புவார்கள். ஆகவே, ஒரு பொருளை தேர்வு செய்திடும் போது இந்த விசயத்தை நினைவிலே கொள்ளுங்கள்.
3. விலையை கவனத்தில் கொள்ளுங்கள்
100 கார் விற்பதும் 1 லட்சம் ஷாம்பு பாக்கெட்டுகள் விற்பதும் ஒன்றல்ல. கார் விற்பதை விடவும் சிறிய ஷாம்பு பாக்கெட்டை விற்பது மிகவும் எளிது. ஆகவே, ஒட்டுமொத்தமான லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு சாதாரண பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் சுலபமாக வாங்கக்கூடிய பொருள்களை கவனத்தில் கொள்ளுங்கள்.
4. அளவும் எடையும் முக்கியம்
நீங்கள் ஆன்லைனில் விற்பனை செய்திடப்போகிறீர்கள். ஆகவே, கொரியர் செலவை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். எங்களது ஊரில் மிகக்குறைவாக அளவில் பெரிய பொருள் கிடைக்கிறது என்பதற்காக அதனை கொள்முதல் செய்துவிட்டு முயற்சித்தால் உங்களது லாபத்தில் பெரும் பகுதியை நீங்கள் கொரியருக்கு செலவு செய்யவேண்டி இருக்கும். ஆகவே, நீங்கள் ஒரு பொருளை தேர்வு செய்திடும் போது அதன் அளவு மற்றும் எடை ஆகியவற்றை கவனத்தில் கொள்ளுங்கள்.
5. அதிகம் தேவைப்படும் பொருள்களில் அக்கறை காட்டுங்கள்
பொதுமக்கள் வாங்கினால் தான் உங்களுக்கு தொழில் நடக்கும். ஆகவே, நீங்கள் தேர்வு செய்திடும் பொருள் என்பது பொதுமக்களால் அதிகம் வாங்கப்படும் பொருளாக இருக்க வேண்டும். தினசரி அல்லது ஒவ்வொரு வாரமும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் கூட கணிசமான அளவில் தொடர்ச்சியாக விற்கப்படும் பொருள்களை தேர்வு செய்வது நல்லது.
6. துறைசார்ந்த வல்லுனர்களுடன் தொடர்பில் இருங்கள்
என்னதான் நாம் படித்து இருந்தாலும் அல்லது பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டிருந்தாலும் கூட அனுபவம் தான் உண்மையிலேயே மிகப்பெரிய ஆசான். அது நீங்கள் தொழிலில் களம் இறங்கிய பிறகு தான் உங்களுக்கு புரியும். ஆனால், உங்களுக்கு முன்னரே யாரேனும் இந்தத்துறையில் இருப்பவர்களாக தெரிந்திருந்தால் அவர்களோடு தொடர்பில் இருங்கள். அவர்களின் அனுபவங்களில் இருந்து எந்த மாதிரியான பொருள்களை தேர்வு செய்திட வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.