உக்ரைன் – ரஷ்யா போரால் ரஷ்யா மீது தொடர்ச்சியாக பொருளாதார தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் விதித்து வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவுக்கு ரஷ்யா வழங்கி வந்த ராக்கெட் எஞ்சின்கள் இனிமேல் வழங்கப்படாது என ரஷ்யா தெரிவித்தது.
உக்ரைன் – ரஷ்யா இடையே நடைபெற்றுவரும் போர் காரணமாக ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. இதற்கு பதிலடியாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் அமெரிக்க விண்வெளி வீரரை தங்களது விமானத்தில் பூமிக்கு அழைத்துவரப்போவதில்லை அவரை அங்கேயே விட்டுவிட்டு வரப்போகிறோம் என ரஷ்யா கூறியதாக செய்திகள் வெளியாயின. இது உண்மையா?
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வுகள் நடத்தி வருகிறார்கள். அதிலே, இருக்கக்கூடிய ஒரு அமெரிக்க விண்வெளி வீரர் தான் மார்க் வாண்டே ஹேய் [Mark Vande Hei] என்பவர். ஏப்ரல் 09,2021 அன்று தனது விண்வெளி பயணத்தை துவங்கிய மார்க் வாண்டே ஹேயின் விண்வெளி பயணம் வருகிற மார்ச் 30, 2022 அன்றோடு முடிவடைகிறது. அன்றைய தினம் அவர் ரஷ்யாவின் விண்வெளி விமானத்தில் பூமிக்கு திருப்புவது தான் திட்டம்.
ஆனால், உக்ரைன் – ரஷ்யா போரால் ரஷ்யா மீது தொடர்ச்சியாக பொருளாதார தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் விதித்து வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவுக்கு ரஷ்யா வழங்கி வந்த ராக்கெட் எஞ்சின்கள் இனிமேல் வழங்கப்படாது என ரஷ்யா தெரிவித்தது.
இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க விண்வெளி வீரரை தங்களது விமானத்தில் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பூமிக்கு அழைத்துவர மாட்டோம் என ரஷ்யா தெரிவித்ததாக செய்திகள் வெளியாயின. இதற்கு பல எதிர்ப்புகளும் உண்டாகின. ஆனால், இது உண்மை அல்ல என ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும், ஏற்கனவே திட்டமிட்டபடி அமெரிக்க விண்வெளி வீரர் அதே விண்வெளி விமானத்தில் பூமிக்கு வரப்போவதாகவும் அதில் மாற்றமும் இல்லை என அமெரிக்க செய்தி தொடர்பாளரும் தெரிவித்து உள்ளார்.