டிஜிட்டல் மீடியாவில் பணத்தை கொட்டும் அரசியல் கட்சிகள்

காலம் மாற மாற காட்சிகளும் மாறும் என்பார்கள். ஒரு ஆளுமையை காலமும் சூழலும் தான் உருவாக்கும் என்ற நிலையினை இன்றைய டிஜிட்டல் யுகம் முறியடித்துக்கொண்டு இருக்கிறது. ஆமாம், பணம் இருந்தால் போதும் உங்களை ஒரு ஆளுமையாக உருவாக்கிவிட முடியும். மக்களை உங்களைப்பற்றிய பேசிக்கொண்டு இருக்கசெய்திட முடியும்.

நீங்கள் கவலைப்பட வேண்டாம், நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதனை நாங்கள் பார்த்துக்கொள்வோம். மீடியா, சமூக வலைத்தளம், பிற விளம்பர யுக்தி என அனைத்தையும் நாங்களே கவனித்துக்கொள்வோம். இப்படி அரசியல்வாதிகளுக்கு பக்கபலமாக நம்பிக்கை வார்த்தைகளை சொல்லிக்கொண்டு பல நிறுவனங்கள் புறப்பட்டுள்ளன. அவற்றுள் சில நிறுவனங்களே சாதித்தும் காட்டியிருக்கின்றன. அதில் மிகவும் சிறப்பு பெற்ற நிறுவனம் Indian Political Action Committee (I-PAC), இதனை உருவாக்கியவர் பிரசாந்த் கிஷோர்.

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியாக ஆட்சியை பிடிக்க அரசியல் வியுகம் அமைத்துக்கொடுத்தது பிரசாந்த் கிஷோர். ஜெகன் மோகன் ரெட்டி ஏற்கனவே பிரபலமான முதல்வரின் பிள்ளையாக இருந்தாலும் மூத்த அரசியல்வாதியான சந்திரபாபு நாயுடுவை வெற்றிகொள்வதற்கு பிரசாந்த் நிறுவனம் மிகப்பெரிய அளவில் உதவியிருக்கிறது என்பதே உண்மை.

அண்மையில் ஜெகன் மோகன் அவர்களின் கட்சி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் செலவின பட்டியலில் பிரசாந்த் கிஷோர் நிறுவனத்திற்கு 37.57 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான சந்திரபாபு நாயுடுவும் 49 கோடியை மீடியா விளம்பரத்திற்காக செலவிட்டுள்ளது.

மொத்தத்தில் மிகப்பெரிய அளவிலான பணத்தை அரசியல் கட்சிகள் டிஜிட்டல் மீடியாவில் தான் கொட்டுகின்றன. இது ஒருவகையில் டிஜிட்டல் மீடியாவிற்கு பலன் அளிக்கின்றன விசயம் தான் என்றாலும் ஜனநாயகத்திற்கு சவாலான விசயமும் கூட.

Tech Tamilan