Orion Story in Tamil
உங்களது குழந்தைகள் அறிவியலில் சிறந்தவர்களாக வர வேண்டும் என விரும்பினால் அவர்களுக்கு இரவு நேரங்களில் வானத்தை காட்டுங்கள். அங்கே இருக்கும் நட்சத்திரங்களின் அழகை அவர்கள் ரசிக்கும் படி செய்திடுங்கள். வானம் பற்றிய சில ஆச்சர்யமான அறிமுகங்களை அவர்களுக்கு கதைகளாக கூறிடுங்கள்.
விண்வெளி பற்றிய அறிமுகம் குறைவாக உள்ளவர்களுக்குக் கூட வானத்தில் ஒரு விசயம் பிடித்திருக்கும் அல்லது அவர்களை அது ஈர்த்திருக்கும். அதுதான் படத்தில் நீங்கள் காணும் மூன்று நட்சத்திரங்கள். எப்போதும் மாறாமல் ஒரே நேர்கோட்டில் இருக்கும் இந்த மூன்று நட்சத்திரங்களை கவனிக்காதவர்கள் இருக்கவே முடியாது. ஏன் இந்த மூன்று நட்சத்திரங்களும் இருப்பிடம் மாறாமல் ஒரே இடத்தில் இருக்கின்றன? இவற்றை ஏன் ஓரியன் பெல்ட் நட்சத்திரங்கள் என அழைக்கிறார்கள்? வாருங்கள் கொஞ்சம் வானத்தை அறிந்துவிட்டு வருவோம்.
விண்வெளி பற்றியும் நட்சத்திரங்கள் பற்றியும் ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்பினால் அவர் ஆரம்பிக்கக்கூடிய ஒரு இடமாக இருக்கக்கூடிய ‘ஓரியன் பெல்ட்’ தான். வானத்தில் நாம் காணும் மூன்று நட்சத்திரங்களும் எப்போதும் ஒரே இடைவெளியில் ஒரே நேர்கோட்டில் இருக்கும். இதனை ஓரியன் பெல்ட் என வானியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இதற்குப் பின்னால் ஒரு கிரேக்க கதை இருக்கிறது. பல விதங்களில் அந்தக்கதை சொல்லப்பட்டிருந்தாலும் இது ஒரு வகை,
ஓரியன் என்பவன் கடலின் கடவுளாக விளங்கிய போஸிடன் அவர்களின் மகன். போர் கலை உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்கிய ஓரியன் தனது தந்தையின் காரணத்தால் கடலில் நடக்கும் ஆற்றலை பெற்றிருந்தான். ஒரு சமயம் அவன் கடலின் மேலாக நடந்து சியோஸ் தீவை அடைந்தான். அங்கே மது போதை அதிகமாகி அங்கே ஆட்சி செய்த ஓனோபியனின் மகள் மெரோப்பை தாக்கினான். இதனால் கோபமடைந்த ஓனோபியன் ஓரியனை கண்மூடித்தனமாக தாக்கி இழுத்துச் சென்றார். பின்னர் ஓரியன், ஹெபியோஸ்டஸ் கடவுளாக இருக்கும் லெம்னோசை அடைந்தான். ஹெபியோஸ்டஸ் தனது சீடரான சிடாலியனிடம் ஓரியனை கிழக்கு நோக்கி அழைத்துச் செல்லும்படி ஆணையிட்டார். அங்கே சூரிய கடவுளால் ஓரியன் குணமடைந்தான். குணமடைந்த ஓரியன் சிடாலியனை தனது தோளில் தூக்கி வைத்துக்கொண்டு மீண்டும் சியோஸ் தீவை நோக்கி பயணப்பட்டான். தன்னை தாக்கிய ஒனோபியனை பழிவாங்கவே ஓரியன் சென்றான். இதனை அறிந்துகொண்ட ஓனோபியன் பாதாளத்திற்குள் சென்று தப்பித்துக்கொண்டார். அதனைத்தொடர்ந்து கிரீட்டிற்கு சென்ற ஓரியன் அங்கே ஆர்ட்டெமிஸ் எனும் கிரேக்க தெய்வத்தையும் அவரது தாயாரையும் கொன்றான். மேலும், இந்த பூமியில் இருக்கும் ஒவ்வொரு மிருகத்தையும் தான் கொல்லப்போவதாகவும் அறைகூவல் விடுத்தான்.
பூமியின் தாய் ஓரியன் செய்வது தவறென உணர்ந்து அவனைக் கொல்ல மிகப்பெரிய தேள் ஒன்றினை அனுப்பினார். அது ஓரியனை வெற்றிகரமாக கொன்றது. இறந்துபோன ஓரியனை ஜீயஸ் [வானம் மற்றும் இடி கடவுள்] விண்மீன்களில் வைத்துவிட்டார். ஓரியன் இறந்ததன் நினைவாக தேளும் சொர்க்கத்தில் சேர்க்கப்பட்டது.
இதுதான் ஓரியன் பற்றிய கிரேக்க கதை.
ஓரியன் அம்பு எய்வது போன்ற புகைப்படத்தில் இடை பகுதியில் பெல்ட் அணியும் இடத்தில் இருப்பவை தான் இந்த மூன்று நட்சத்திரங்களும். ஆகவே தான் இதனை ஓரியன் பெல்ட் என அழைக்கிறார்கள். பூமியில் நிலவும் காற்று மாசு மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்டவைகளால் சில இடங்களில் இவை சரியாக தெரியாவிட்டாலும் கூட பல நேரங்களில் இவை நமது கண்களுக்கு எளிதில் புலப்படும்.
பூமியில் இருந்து நாம் விண்வெளியில் பார்க்கும் பொருள்களின் ஒளிர்வு தன்மையை விஞ்ஞானிகள் அளவிட சில அளவுகோல்களை [apparent magnitude] பயன்படுத்துகிறார்கள். அதன்படி, apparent magnitude எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அதற்கு எதிர்மறையாக அந்தப்பொருள் தெளிவாகத் தெரியும். உதாரணத்திற்கு, சூரியனின் அளவு -26.78 எனவும் நிலவின் அளவு -12.7 என்ற அளவிலும் இருக்கும். இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் ஓரியன் பெல்ட் நட்சத்திரங்களின் apparent magnitude +2. ஆகவே தான் அது சற்று மங்கலாக நம் கண்களுக்குத் தெரியும். இவைகளின் பெயர்கள் முறையே அல்நிடாக், அல்நிலாம், மின்டாக்கா.
இப்போது நீங்கள் அல்நிடாக் இல் இருந்து நேர்மேலே 10 டிகிரி கோணத்தில் ஒரு கோடு போட்டால் அங்கே ஒரு சிவந்த நிறத்தில் ஒரு நட்சத்திரத்தை காண முடியும். இதன் பெயர் பெடல்ஜூஸ் [betelgeuse]. விண்வெளியை பொறுத்தவரைக்கும் ஒரு நட்சத்திரம் ஊதா நேரத்தில் காட்சி அளித்தால் அது மிகவும் சூடாக இருக்கிறதென்றும் ஆரஞ்சு துவங்கி சிகப்பு நிறத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் குளிர்வான நிலையில் இருப்பதாகவும் அர்த்தம். பூமியில் இருந்து 430 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் பெடல்ஜூஸ் நட்சத்திரம் பூமியில் இருந்து பார்க்கக்கூடிய 10 ஆவது ஒளிர்வான நட்சத்திரம். மின்டாக்கா நட்சத்திரத்தில் இருந்து கீழே ஒரு கோடு வரைந்தால் அங்கே இருக்கக்கூடியது தான் ரைஜெல் [Rigel]. இது பூமியில் இருந்து 860 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றன. பெடல்ஜூஸ் க்கு எதிரே இருக்கக்கூடிய நட்சத்திரம் தான் பெல்லாட்ரிக்ஸ் [bellatrix]. ரைஜெல் க்கு எதிரே இருக்கக்கூடியது தான் சைப் [saiph].
இப்படித்தான் ஒவ்வொரு நட்சத்திர குவியலும் ஒரு சித்திரத்துடன் ஒப்பிடப்பட்டு நினைவில் வைத்துக்கொள்ளப்பட்டன. நாம் இரவில் பார்க்கும் மூன்று நட்சத்திரம் மிகச்சரியாக மூன்று நட்சத்திரங்கள் அல்ல. நாம் தொலைநோக்கி மூலமாக அருகே சென்று பார்த்தால் இன்னும் சில நட்சத்திரங்களும் அதன் அருகே இருப்பதைக்காண முடியும். இருந்தாலும் நமது கண்களுக்கு பிரகாசமாக மூன்று மட்டுமே தெரிகிறது.
இதுதான் நாம் ரசித்துப்பார்க்கும் மூன்று நட்சத்திரங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.