Site icon Tech Tamilan

மனிதர்களில் நியூராலிங்க் சோதனை நடத்த அனுமதி! இனி நடக்கப்போவது என்ன?

மனிதர்களின் மூளையையும் கணினியையும் இணைக்கின்ற இணைப்பான்களை உருவாக்கி வருகிறது எலன் மஸ்க்கின் நியூராலிங்க் [Neuralink] நிறுவனம். இந்த சோதனை மட்டும் சாத்தியமானால் மனிதர்களுக்கு மூளை குறைபாட்டினால் ஏற்படும் பக்கவாதம், மூளை செயலிழப்பு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். இதுவரைக்கும் விலங்குகளில் மட்டுமே இந்த சோதனை நடைபெற்று வந்த சூழ்நிலையில் தற்போது மனிதர்களில் இந்த சோதனையை நடத்துவதற்கு அமெரிக்காவின் FDA [Food and Drug Administration] அனுமதி அளித்துள்ளது.

இந்த அனுமதி, நியூராலிங்க் சோதனைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, நாம் நியூராலிங்க் சோதனை குறித்து விரிவாக கட்டுரை எழுதி இருக்கிறோம். அதனை படிக்க விரும்பினால் இங்கே கிளிக் செய்து படிக்கலாம். இந்தக்கட்டுரையில், நியூராலிங்க் சோதனை என்றால் என்ன? நியூராலிங்க் சோதனை வெற்றி அடைந்தால் ஏற்படப்போகும் நன்மைகள் என்ன? என்பவை உள்ளிட்ட பல விசயங்களை பார்க்கலாம்.

நியூராலிங்க் சோதனை என்றால் என்ன?

2016 ஆம் உருவாக்கப்பட்ட நியூராலிங்க் என்ற நிறுவனம் மூளை – கணினி இணைப்பான்களை [ brain-computer interface] உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நியூராலிங்க் நிறுவனம் மூளைக்கு குறைவான பாதிப்பை ஏற்படுத்துகிற இணைப்பான்களை [electrodes] உருவாக்கி உள்ளது. இந்த இணைப்பான்களை மூளையில் நிறுவுவதற்கு ரோபோ வையும் உருவாக்கி இருக்கிறது இந்நிறுவனம்.

இதில், ஒரு சிறிய அளவிலான சிப்பானது மூளையில் நிறுவப்பட்டு இருக்கும். தலைக்கு வெளியே இருக்கும் டிரான்ஸ்மிட்டருடன் இது இணைக்கப்பட்டு இருக்கும். கணினியுடன் இணைக்கப்பட்டு இருக்கும் டிரான்ஸ்மிட்டர் ஆனது கணினிக்கு தகவல்களை அனுப்பும் அதேபோல கணினியில் இருந்து தகவல்களை பெற்று மூளைக்கும் அனுப்பும்.

மனிதர்களின் தலைமுடியைவிடவும் மெல்லிய ஆயிரக்கணக்கான இணைப்பான்கள் மூளையையும் சிப்பையும் இணைக்கின்றன. இதன்மூலமாக, மூளையின் ஒவ்வொரு செயல்பாடும் சிப்பிற்கு அனுப்பப்படும். அதேபோல, கணினியில் இருந்து பெறப்படும் தகவல்களையும் இந்த இணைப்பான்கள் மூலமாக சிப் அனுப்பும். இந்த இணைப்பான்கள் மூலமாக, மனிதர்களின் அசைவு, உணர்வு, செயல்பாடு உள்ளிட்ட விசயங்களை கட்டுப்படுத்த முடியும்.

2019 ஆம் ஆண்டு, இந்த சிப் இணைக்கப்பட்ட குரங்கு ஒன்று வீடியோ கேம் விளையாடும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இதன் மூலமாக குரங்கின் மூளை செயல்பாடு முற்றிலுமாக பதிவு செய்யப்பட்டது. அதேபோல, கணினியில் கர்சர் அசைவதை கட்டுப்படுத்தவும் முடிந்தது.

நியூராலிங்க் சோதனை வெற்றி அடைந்தால் ஏற்படப்போகும் நன்மைகள் என்ன?

மூளை தான் மனிதர்களின் மிக முக்கியமான ஓர் உடல் உறுப்பாக பார்க்கப்படுகிறது. மூளையில் ஏற்படும் சிறு பாதிப்புகள் கூட மிகப்பெரிய சிக்கலை மனிதர்களுக்கு ஏற்படுத்துகிறது. மூளையில் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க பெரிய அளவில் வசதிகளும் இல்லாத சூழலே நிலவுகிறது. இந்த சூழலில் தான், எலன் மஸ்க்கின் நியூராலிங்க் சோதனை நடைபெற்று வருகிறது. இப்போது மனிதர்களிடம் சோதனை நடத்திட அனுமதி பெறப்பட்டுள்ளதால் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்த சோதனை மனிதர்களிடம் வெற்றி அடைந்துவிட்டால், மனிதர்களுக்கு இருக்கும் மூளை சார்ந்த நோய்களான அல்சீமர் நோய் [alzheimer’s disease], பார்கின்சன் நோய் [parkinson’s disease] மற்றும் விபத்தினால் தண்டுவடத்தில் ஏற்படும் பிரச்சனைகள் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். அதேபோல, மனிதர்களின் மூளை செயல்பாடு, நினைவு திறன், மற்றும் கற்றுக்கொள்ளும் திறன் உள்ளிட்டவைகளையும் மேம்படுத்த முடியும்.

Exit mobile version