ஆரம்பகாலங்களில் மது , புகையிலை பழக்கத்திற்கு அடிமையாதல் பற்றி கேள்விப்பட்டிருப்போம் . அதன்பிறகு தொலைக்காட்சி , கணிணி , மொபைல் போன்ற டிஜிட்டல் சாதனங்களின் வருகைக்கு பிறகு அவற்றிற்கு அடிமையாதல் தொடர்ந்தது . தற்போது இண்டெர்நெட் யுகம் , தொலைத்தொடர்பு வளர்ச்சியின் தாக்கம் காரணமாக மிக குறைந்த விலைக்கே அதிக வேகத்திலான இண்டர்நெட்டை பெற முடிகின்றது .விளைவு , அதிக வீடியோக்களை பார்க்கின்றோம் , அதிக செய்திகளை வாசிக்கிறோம் , அதிக நேரம் சமூக வலைத்தளங்களிலேயே இருக்கின்றோம் . இது ஆரம்பத்தில் பொழுதுபோக்கிற்கானதாக இருந்தாலும் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு நம்மை அடிமையாக்கிவிடுகிறது [Internet Addiction – இன்டர்நெட் அடிமை].
நம்ப முடியவில்லையா ? என்னால் நெட்பிலிக்ஸ் பார்க்காமல் இருக்க முடியவில்லை என சிகிச்சை பெற்றுள்ளார் பெங்களூருவில் இருக்கும் இளைஞர் ஒருவர்.
மின்சாரம் இல்லாமல் ஒருமணிநேரம் இருக்கமுடிந்த உங்களால் இண்டெர்நெட் இணைப்பு 5 நிமிடம் போனால் இருக்க முடிகிறதா? ஏதேதோ செய்கிறதல்லவா, எத்தனை முறை நம் நெட்ஒர்க்கை திட்டி தீர்க்கிறோம்.
உலக சுகாதார நிறுவனம் [WHO] மற்றும் அமெரிக்க மனநல ஆராய்ச்சியகம் இரண்டுமே “இணையத்திற்கு அடிமையாதல் [Internet Addiction] ” என்பதனை நோயாகவே கருதுகிறார்கள் . ஏற்கனவே “எலக்ட்ரானிக் கருவிகளில் விளையாடும் விளையாட்டிற்கு அடிமையாதல் ” என்பதனை உலக அளவில் கவனிக்கப்படவேண்டிய ஆபத்து என வகைப்படுத்தி இருந்தார்கள் .
——————————————————————————————-
Advertisement:
——————————————————————————————–
அறிகுறிகள் [Symptoms of Internet Addiction]
>> நாட்கள் அதிகமாக அதிகமாக நீங்கள் ஆன்லைன் வீடியோ கேமை அதிக நேரம் விளையாடுகிறீர்களா ?
>> வாங்குவதற்கு அவசியமில்லை என்றாலும் ஆன்லைனில் பொருள்களை பார்க்கும் அல்லது வாங்க நினைக்கும் பழக்கமுள்ளவரா ?
>> சமூகவலைதளங்களை நீங்கள் பார்க்க கூடாது என நினைத்தாலும் கட்டுப்படுத்திட முடியவில்லையா ?
>>உங்களது அன்றாட வாழ்க்கையில் எலெக்டானிக் கருவிகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனவா ?
இவை இண்டெர்நெட் அடிமையாதல் நோய்க்கான அறிகுறிகளில் சில. இதனைத்தான் Compulsive Internet Use (CIU), Problematic Internet Use (PIU), or iDisorder என அழைக்கிறார்கள்.
எப்படி தவிர்ப்பது? [Recover from Internet Addiction]
தீர்மானியுங்கள் [Decide yourself]
நான் அதிகமாக இன்டர்நெட் அல்லது எலெக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துகிறேன். அதனை குறைத்துக்கொள்ளவேண்டும். இந்த எண்ணத்தை முதலில் நீங்களாகவே வளர்த்துக்கொள்ளுங்கள். நாம் விரும்பும் ஒரு விசயத்தை வேண்டாமென்று இன்னொருவர் கூறினால் எரிச்சல் தான் உண்டாகும். ஆகவே நீங்களாகவே “நான் இணையத்தை பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள போகிறேன்” என முடிவெடுங்கள்.
கணக்கெடுங்கள் [Monitor your Internet Usage]
நாம் எவ்வளவு நேரத்தை இன்டர்நெட் மற்றும் எலெக்ட்ரானிக் கருவிகளினால் தேவையில்லாமல் செலவழிக்கிறோம் என்பதனை அறிய ஒரு மாதத்திற்கு கணக்கிடுங்கள். அப்போதே உங்களுக்கு நேரவிரயம் குறித்த புரிதல் ஏற்பட்டு விடும். பின்னர் எந்த தருணங்களில் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ளலாம் என்பதனை யோசித்து செயல்படுத்துங்கள்.
இன்டர்நெட் இணைப்பை துண்டியுங்கள் [Maintain Distance]
இரவு நேரங்களில் தூங்க துவங்கிய பிறகு மொபைலை அருகில் வைத்துக்கொள்ளாதீர்கள். எழுந்து சென்று எடுக்கும் தொலைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதனால் நீங்கள் அடிக்கடி அதனை செக் செய்வதை தவிர்க்கலாம். WIFI பயன்படுத்துபவராக இருந்தால் Modem மை OFF செய்திடுங்கள்.
பிற வேலைகளில் ஈடுபடுங்கள் [Focus on Entertainment]
எந்தவொரு அடிமைத்தனத்தில் இருந்தும் விடுபட மிக அருமையான வழி, நாம் விரும்புகின்ற இன்னொரு செயலில் ஈடுபடுவதுதான். நண்பர்களுடன் இணைந்து வெளியில் செல்வது, விளையாட்டில் பங்கேற்பது உள்ளிட்ட விசயங்களில் நேரத்தை செலவிட துவங்கலாம்.
தனிமையை தவிர்த்துவிடுங்கள்
பொதுவாக நாம் வேண்டாத பழக்கத்திற்கு அடிமையாவது எப்போது நடக்குமென்றால், தனிமையில் தான் நடக்கும். ஆம் நண்பர்களே, துவக்கத்தில் நம் தனிமையை போக்கிட துணைக்கு அழைத்துக்கொள்ளும் எலெக்ட்ரானிக் கருவிகள் பின்னர் நம்மையே ஆட்படுத்திக்கொண்டு விடுகிறது என்பதுதான் உண்மை. தொடர் பழக்கம் ஏற்பட்டுவிட்டால் கவலைப்படாமல் உங்களது நேரத்தை நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் செலவழிக்க துவங்குங்கள்.
பெற்றோர்களே !
மாணவர்கள் உடனான கலந்துரையாடலின் போது நமது பிரதமர் கூறியதை பெற்றோருக்கு கூற விரும்புகிறேன். உங்களது குழந்தைகள் தொழில்நுட்பத்தோடு பழகுவதற்கு அனுமதி அளியுங்கள், ஆனால் தொழில்நுட்பம் அவர்களை கட்டுப்படுத்திடாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். குழந்தைகளின் தொழில்நுட்ப உலகத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதனை தெரிந்து கொண்டு சரி தவறை எடுத்துச்சொல்லி நல்வழிப்படுத்துங்கள்.
இதையும் படிங்க : உடல்நலனை பாதிக்காமல் மொபைல் பயன்படுத்த 3 ஐடியாக்கள்
TECH TAMILAN
இதையும் படிங்க,