ஏற்கனவே மொபைலே கதியென கிடப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதிலிருந்து விடுபடுவது எப்படியென்பது குறித்தும் ஏற்கனவே விரிவான பதிவினை எழுதியிருந்தேன் . அதனை படிக்காதவர்கள் கிளிக் செய்து படியுங்கள் . அதன் தொடர்ச்சிதான் இந்தப்பதிவு .
டிஜிட்டல் கருவிகள் தவிர்க்க முடியாதவை , ஆனால் பயன்பாட்டினை குறைத்துக்கொள்ள முடிந்தவை
Mobile phone , Tv , Computer போன்ற டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்களை தொடர்ச்சியாக பயன்படுத்துவதென்பது உடல்நலத்திற்கு நல்லதல்ல என்பது நான் உட்பட அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் நம் அன்றாட வாழ்வில் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தாமல் இருக்கமுடிவதில்லை .
குறிப்பாக மொபைல் போன் தான் பலரால் அதிக நேரங்களில் பயன்படுத்தப்படுகிறது . உடல்நலனை பாதிக்காத விதம் மொபைல் போனை பயன்படுத்துவதெப்படி என்பதைத்தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம் .
கழுத்து பாதிப்படையாமல் பயன்படுத்திட வேண்டும்
பெரும்பாலான நேரங்களில் நாம் நின்றுகொண்டும் நடந்துகொண்டும் மொபைலை பயன்படுத்துகின்றோம் . அவ்வாறு பயன்படுத்தும்போது மொபைலை பார்க்கும் விதமாக தலையை குனியச்செய்கிறோம் . இதன் காரணமாக மிகப்பெரிய அழுத்தத்தினை நமது கழுத்துப்பகுதிக்கு நாம் கொடுப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள் .
அதற்காக பேருந்திற்கு காத்திருக்கும்போதும் வெளியில் நடந்துசெல்லும் போதும் மொபைல் போனை பயன்படுத்த கூடாதா ? என கேட்கலாம் . முடிந்தவரையில் தவிர்க்கலாம் . பயன்படுத்தியே தீருவேன் என்றால் மொபைலை பார்க்க அதிகம் குனியாமல் கழுத்துப்பகுதிக்கு கொடுக்கும் அழுத்தத்தை குறைக்க முயலுங்கள் . உடலை ஒட்டிக்கொண்டு மொபைலை பயன்படுத்தாமல் முடிந்தவரையில் கண்களுக்கு நேர்கோட்டில் மொபைல் திரை இருக்குமாறு பயன்படுத்துங்கள்.
இரவில் மொபைல் பயன்படுத்தும் விதம்
சூரியன் மற்றும் டிஜிட்டல் சாதனங்களில் இருந்து அதிக சக்தி வாய்ந்த ஊதா நிற ஒளிக்கதிர்கள் வெளிப்படுகிறது . சூரியன் மற்றும் நட்சத்திரங்களில் இருந்து வெளிப்படும் இக்கதிர்கள் தான் மனிதர்களுக்கு தூக்கத்தை வரவழைக்கும் மெலடோனின் உற்பத்தியை குறைத்து பகலில் தூக்கம் வராமல் இருக்கச்செய்கின்றன .
இரவு நேரங்களில் நாம் மொபைல் திரையை பார்க்கும் போது வெளிப்படுகின்ற ஊதா கதிர்கள் நமது தூக்கத்தை தடுப்பதுடன் கண்களின் செல்களையும் பாதிப்பிற்கு உள்ளாக்குகின்றன .
இரவில் பயன்படுத்தாதீர்கள் என்றால் கேட்கவா போகிறீர்கள் (நானும் தான் ). இரவில் பயன்படுத்துவோர் இதையாவது செய்திடலாம்.
பின்வரும் ஆப்சன்களை பயன்படுத்தி இரவு நேரங்களில் கண்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் ஆபத்தான கதிர் வீச்சிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் .
Android Users :
Settings > Display > Night Light (Eye Comfort)
iOS users :
Settings > Display & Brightness > Night Shift
மொபைல் பயன்படுத்தும் நேரத்தை குறைத்தல்
சிலர் அடிக்கடி மொபைலை திறந்து பார்ப்பதை பார்த்திருப்போம் , இத்தனைக்கும் நோட்டிபிகேசன் கூட வந்திருக்காது . இதுபோன்ற செயல்கள் அதிகப்படியாக மொபைல் பயன்படுத்தியதனால் ஏற்பட்ட மன வியாதி . இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரி செய்ய வேண்டும் .
மேலும் அதிகபடியாக மொபைல் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவது உடல் அளவிலும் மனதளவிலும் மிகபெரிய பிரச்சனைகளை கொண்டுவருகிறது .
நாம் எவ்வளவு நேரம் மொபைல் பயன்படுத்துகின்றோம் என்பதனை கண்காணிக்க பல ஆப்கள் கிடைக்கின்றன . ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய iOS 12 இல் Screen Time என்னும் புதிய வசதியினை கொண்டுவருகின்றது . அதனைபோலவே ஆண்ட்ராய்டிலும் ஆப் சோதனையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது .
டிஜிட்டல் கருவிகள் தவிர்க்க முடியாதவை , ஆனால் பயன்பாட்டினை குறைத்துக்கொள்ள முடிந்தவை
TECH TAMILAN