Site icon Tech Tamilan

OTP ஐ வைத்து நடக்கும் பண மோசடிகள் | உஷாரா இருங்க மக்களே | OTP Scam

OTP fruads - dont share to others tamil

OTP fruads - dont share to others tamil

By monetizing a blog with publisher you can earn money

OTP Scam

அறிவியல் பூர்வமான பண திருட்டு தற்போது அதிகரித்து வருகிறது. சற்று விழிப்புணர்வுடன் இருந்தால் பெரும் வங்கி மோசடிகளில் இருந்து நீங்கள் தப்பித்துக்கொள்ள முடியும்.

மிகவும் பாதுகாப்பான பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக OTP எனும் பாதுகாப்பு அம்சம் கூடுதலாக இணைக்கப்பட்டது. ஆனால் தற்போது OTP ஐ வைத்து நடக்கும் ஏமாற்று வேலைகள் அதிகரித்து இருக்கின்றன. படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற பேதமின்றி பலர் இதில் ஏமாறுகிறார்கள். 

இங்கே OTP ஐ வைத்து பண மோசடி எப்படி நடைபெறுகிறது என விளக்கி இருக்கிறேன். நீங்கள் படிப்பதோடு நில்லாமல் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ளுங்கள்.

OTP பாதுகாப்பு அம்சம்

OTP என்பதற்கான விளக்கம் One Time Password. நிச்சயமாக நம் அனைவருக்குமே OTP குறித்த அனுபவம் இருக்கவே செய்யும். பண பரிவர்த்தனைகள் செய்வதற்கு மட்டுமல்லாமல் சில அப்ளிகேஷன் உள்ளிட்டவற்றை இயக்குவதற்கும் கூட OTP ஐ பயன்படுத்தும் போக்கு தற்சமயம் அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட நபரின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் தற்காலிக பாஸ்வேர்டு எண்ணை உள்ளீடாக கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தின் காரணமாக சரியான நபரால் தான் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது என்பதை உறுதி செய்துகொள்வதே OTP யின் முக்கியப்பயன்பாடு. 

OTP பாதுகாப்பானதா?

ஒரு வங்கியில் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு வாங்கி வைத்திருக்கிறோம். அதில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது குறிப்பிட்ட வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும். அந்த எண்ணை உள்ளீடாக கொடுக்க வேண்டும். சரியான OTP எண்ணை கொடுப்பதன் வாயிலாகவே குறிப்பிட்ட பண பரிவர்த்தனையை செய்து முடிக்க முடியும். 

 

பொதுவாக OTP எண் பயனாளர்களின் மொபைல் எண்ணை அடையும் வரைக்கும் பாதுகாப்பானதாக இருக்கலாம். ஆனால் பயனாளர்களின் மொபைல் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் அல்லவா? அங்கு தான் பல்வேறு தொழில்நுட்பங்களின் வாயிலாக OTP எண் திருடப்பட்டு பயனாளர்களின் பணம் திருடப்படுகிறது. 

OTP திருட்டு எப்படி நடைபெறுகிறது?

பொதுமக்களின் தவறான செயல்பாடு

அரசின் சார்பாகவும் வங்கிகளின் சார்பாகவும் OTP யை பிறரிடம் பகிர்ந்துகொள்ளாதீர்கள் என்ற எச்சரிக்கை அவ்வப்போது விடுக்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது. இருந்தாலும் கூட பொதுமக்களில் பலர் பண ஆசை காட்டிடும் போது தங்களது மொபைல் எண்ணுக்கு வருகிற OTP எண்ணை மூன்றாவது நபரிடம் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் பலரிடையே இருக்கிறது. 

வங்கிக்கணக்கு தகவல்களை திருடும் முறை

ஒருவரது வங்கிக்கணக்கு உள்ளிட்ட தகவல்களையும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு உள்ளிட்ட தகவல்களையும் பின்வரும் ஏதாவது ஒரு வழிமுறையில் திருடர்கள் பெற்றுவிடுகிறார்கள். 

 

1. வங்கிகளில் இருந்து பேசுவதைப்போலவோ அல்லது ATM மெஷின்களில் ஸ்கிம்மர்களை வைத்திருப்பதன் மூலமாகவோ அல்லது கிரெடிட், டெபிட் கார்டுகளை திருடுவதன் மூலமாகவோ கார்டுகளின் எண்ணையும் CVV எண்ணையும்  அறிந்துகொள்கிறார்கள். 

 

2. பயனாளர்களின் வங்கிக்கணக்கு உள்ளிட்ட தகவல்களை கேட்கும் விதமான Form லிங்குகளை பொதுமக்களின் மின்னஞ்சலுக்கு அனுப்புவார்கள். அதனை வங்கிகளில் இருந்து வந்ததாக நினைக்கும் பொதுமக்கள் தகவல்களை கொடுக்கும் போது தகவல்களை திருடர்கள் பெற்றுவிடுகிறார்கள்

 

3. பெரிய ஆபர், டிஸ்கவுண்ட், ரிவார்டு பாயிண்ட் உள்ளிட்டவற்றை வழங்குவதாக கூறி அனுப்பப்படும் SMS/Email  மூலமாக வங்கிக்கணக்கு தகவல்கள் திருடப்படும்

OTP எப்படி திருடப்படுகிறது?

திருட்டுத்தனமாக பெறப்படும் வங்கிக்கணக்கு தகவல்களை வைத்து பண பரிவர்த்தனையை மேற்கொள்ளும் திருடர்கள் பயனாளர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் OTP யை திருடுவதற்கு பல்வேறு வழிமுறைகளை கையாளுகிறார்கள்.

நேரடியாக பேசி திருடப்படுகிறது

இது மக்களின் பேராசையை மற்றும் முட்டாள்தனத்தை குறிவைத்து நடத்தப்படுகிற திருட்டு. உங்களுக்கு மிக சிறந்த ஆபர்களை தருகிறோம், உங்களது வங்கிக்கணக்கிற்கு நாங்கள் அனுப்புகிற பணம் வந்து சேர வேண்டும் என்றால் உங்களது மொபைல் எண்ணிற்கு ஒரு OTP எண் வரும் என சொல்லுவார்கள். நாமும் பெரிய தொகை இலவசமாக வரப்போகிறதே என எண்ணிக்கொண்டு அவர்களிடம் OTP எண்ணை சொல்லுவோம். அவ்வளவு தான்.

 

OTP ஐ திருடும் ஆப்கள் 

 

OTP ஐ திருடுவதற்கென்றே சில ஆப்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆப்கள் பார்ப்பதற்கு எந்தவித சந்தேகத்தையும் ஏற்படுத்தாதவாறு இருக்கும். இந்த ஆப்கள் ஒருவருக்கு OTP எண் வந்ததற்கான தடையத்தையே அழித்துவிடும் திறன் வாய்ந்தவை. 

 

இதற்காக உருவாக்கப்பட்ட ஆப்கள் மொபைலுக்கு OTP வந்தவுடன் அதனை இடைமறித்துவிடும். அதோடு நில்லாமல் குறிப்பிட்ட OTP ஐ கொண்ட SMS ஐ திருடர்களின் மொபைல் எண்ணிற்கு அனுப்பி வைக்கும். பிறகு அந்த SMS ஐ அழித்துவிடும். இதன் காரணமாக OTP வந்தது கூட பயனாளருக்கு தெரியாது. பணம் எடுக்கப்பட்டவுடன் தான் இப்படியொரு திருட்டு அரங்கேறியதே தெரியவரும். 

 

கூகுள் பிளேஸ்டோர் மற்றும் ஆப்பிள் பிளேஸ்டோர் உள்ளிட்டவைகளால் கூட கண்டறிய முடியாதபடி இந்த ஆப்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கும். 

விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மக்களே

அனைத்து வங்கிகளும் கூறுவதைப்போன்று எப்போதும் யாரிடமும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்ட தகவல்களை யாரிடமும் பகிராதீர்கள். அதேபோல OTP எக்காரணத்தை முன்னிட்டும் வேறு ஒருவருடன் பகிர்ந்துகொள்ளாதீர்கள். உங்களுடைய பணம் திருடப்பட்டால் காவல்துறை குற்றவாளிகளை கண்டறியும் வரை உங்களால் திருடப்பட்ட பணத்தை மீண்டும் பெறவே முடியாது, வங்கிகள் அதற்கு பொறுப்பேற்காது. ஆகவே பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டியது உங்களது பொறுப்பு. 

QR Code பண மோசடி எப்படி நடக்கிறது?| தப்பித்துக்கொள்வது எப்படி?






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version