கிசான் விகாஸ் பத்ரா திட்டம் என்றால் என்ன? Kisan Vikas Patra Scheme in tamil

விவசாயிகள் உள்ளிட்ட ஏழை எளிய மக்கள் பணத்தை பாதுகாப்பாக சேமிப்பதற்காக 1988 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட திட்டம் தான் “கிசான் விகாஸ் பத்ரா” [Kisan Vikas Patra] என்கிற சேமிப்புத் திட்டம். இந்த திட்டம் இந்திய அஞ்சல் துரையின் சார்பாக துவங்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இத்திட்டம் 2011 வரைக்கும் நடைமுறையில் இருந்தது. பிறகு தடைபட்ட இத்திட்டம் 2014 ஆம் ஆண்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

கிசான் விகாஸ் பத்ரா திட்டம் எப்படி செயல்படுகிறது?

கிசான் விகாஸ் பத்ரா திட்டம் துவங்கப்பட்டதன் முக்கிய நோக்கம் சாமானிய மக்களை நம்பிக்கையோடு முதலீடு செய்திட வைப்பது தான். குறிப்பிட்ட வயதை எட்டிய நபர்கள் அஞ்சல் அலுவலகங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் இந்த கணக்கை துவங்கலாம். அஞ்சலகங்களில்  கிடைக்கும் ரூ 1000, ரூ 5000, ரூ 10,000, ரூ 50,000 மதிப்புடைய முதலீட்டு பாத்திரங்களை வாங்கிக்கொள்ளலாம். இந்தப் பத்திரங்களில் முதலீடு செய்திடும் தொகைக்கு ஆண்டுக்கு 8.7% வட்டி கொடுக்கப்படும். இந்தத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகையானது அடுத்த 100 மாதங்களில் [8 ஆண்டுகள், 2 மாதங்கள்] இரட்டிப்பாக மாறிவிடும். அதுவரைக்கும் காத்திருக்க வேண்டும். 

ஒருவேளை, இடையிலேயே பத்திரத்தில் இருந்து பணத்தை பெற வேண்டும் என நினைத்தால் குறைந்தது 30 மாதங்கள் [2 ஆண்டுகள், 6 மாதங்கள்] ஆவது நிச்சயமாக காத்திருக்க வேண்டும். அதன் பிறகு தான் பணத்தை பெற முடியும். 

கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் முதலீடு செய்ய மூன்று முறைகள் உள்ளன, 

Single holder முறை : இந்த முறையில், குறிப்பிட்ட வயதை எட்டிய ஒருவரால் முதலீட்டுக்கு ஏற்றவாறு பத்திரத்தை வாங்க முடியும். அதேபோல, அவர் இன்னொரு மைனர் பெயரிலும் பத்திரத்தை வாங்க முடியும். யார் பெயரில் வாங்கப்படுகிறதோ பத்திரம் அவர்களது பெயரிலேயே வழங்கப்படும். 

Joint A type முறை : இருவர் இணைந்து இந்தமுறையில் பத்திரத்தை வாங்க முடியும். அவர்கள் இருவரின் பெயரிலும் பத்திரம் வழங்கப்படும். பத்திரம் முதிர்வை எட்டியவுடன் இருவர் வங்கி கணக்கிலும் பணம் வரவு வைக்கப்படும். இடைப்பட்ட காலத்தில் ஒருவர் இறந்துவிட்டால் மொத்தப் பணமும் உயிரோடு இருக்கும் ஒருவரின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். 

Joint B type முறை : இந்த முறையிலும் இருவர் பெயரில் முதலீடு செய்ய முடியும். ஆனால், முதிர்வை எட்டியவுடன் ஒருவர் வங்கிக்கணக்கில் தான் பணம் செலுத்தப்படும். ஒருவேளை ஒருவர் இறந்துவிட்டால் உயிரோடு இருப்பவருக்கு வழங்கப்படும்.

கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் நன்மைகள்

வங்கிக்கணக்கு இல்லாத கிராமப்புற மக்கள் கூட அஞ்சலக அலுவலகம் வாயிலாக இந்தத்திட்டத்தில் முதலீடு செய்திட முடியும். 

நிரந்தரமான வட்டி வழங்கப்படும் என்பதால் பாதுகாப்பாக முதலீடு செய்திட நினைப்போர் இந்தத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். 

பாதுகாப்பான திட்டம் என்பதனாலும் மிகக்குறைந்த அளவில் கூட முதலீடு செய்யலாம் என்பதாலும் இது ஏழை மக்களுக்கு ஏற்ற திட்டம். 

இத்திட்டம் ஏழை விவசாயிகளை நோக்கியே உருவாக்கப்பட்ட திட்டம்.


மேலும் பல அரசின் திட்டங்கள் குறித்து படிக்க இங்கே கிளிக் செய்திடுங்கள்