நகரங்களின் பல்வேறு வீடுகளில் RO தண்ணீர் சுத்தீகரிப்பான் தான் பயன்படுத்தப்படுகிறது. இதில் 1 லிட்டர் தூய்மையான நீர் உருவாக 3 லிட்டர் தண்ணீர் வீணாகும். இதனை அடிப்படையாகக்கொண்டு மறுசுழற்சி முறையை உருவாக்கி அசத்தி இருக்கிறார்கள் குருகிராம் பள்ளி மாணவர்கள்
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைப்படி 2050 இல் 5 பில்லியன் மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள். நாம் ஒவ்வொருவரும் யோசித்து பார்த்தால் இன்றே நாம் அத்தகைய தண்ணீர் பிரச்சனைக்குள் நுழைந்துவிட்டோம் என்பதனை புரிந்துகொள்ள முடியும். இந்த சூழ்நிலையில் தான் தண்ணீர் வீணாவதை குறைக்கும் பொருட்டு ஒரு மறுசுழற்சி அமைப்பை உருவாக்கி அசத்தி இருக்கிறார்கள் குருகிராம் பள்ளி மாணவர்கள்.
நகரங்களில் பெரும்பான்மையான வீடுகளில் குடிநீரை பெறுவதற்கு RO முறையில் செயல்படும் சுத்தீகரிப்பான்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். இந்த இயந்திரத்தில் ஒரு லிட்டர் தூய்மையான குடிநீர் உருவாகும் போது 3 லிட்டர் நீர் வீணாவது வழக்கமான ஒன்று. இதைத்தான் தற்போது குருகிராம் பள்ளி மாணவர்கள் தங்களது கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளனர்.
2019 ஆம் ஆண்டு ஆதித்யா தன்வர், அர்ஜுன் சிங் பேடி, ஜெய குரானா, முகமது உமர், பியா சர்மா ஆகிய மாணவர்கள் தங்களது 10 ஆம் வகுப்பு புராஜெக்ட் க்கு “தண்ணீர் சேமிப்பு” என்ற தலைப்பை எடுத்துக்கொண்டார்கள். அது குறித்து ஆய்வுகளை துவங்கிய அவர்கள் RO [Reverse osmosis] இயந்திரத்தில் இருந்து பெருமளவு நீர் வீணாவதை கருத்தில் கொண்டார்கள். தங்களை Fluid Force என அழைத்துக்கொள்ளும் இந்த அணியினர் 1000 லிட்டர் அளவு தண்ணீரை சேமிக்கும் அமைப்போடு வந்தார்கள்.
இவர்களின் அமைப்பு எப்படி வேலை செய்கிறது?
https://youtu.be/OEhMD05fKrQ
RO இயந்திரத்தில் இருந்து வெளியாகும் நீர் ஒரு வாளியில் சேமிக்கப்படுகிறது. பின்னர் அந்த நீரானது பம்ப் மூலமாக சமையலறையில் இருக்கும் பாத்திரங்கள் கழுவும் பகுதியில் இருக்கும் டேப் உடன் இணைக்கப்பட்டு இருக்கும். அந்த தண்ணீர் வரக்கூடிய குழாய் அமைப்பு இந்த அணியினர் உருவாக்கியதாக இருக்கும். இவர்கள் செய்திருக்கும் மாற்றத்தின்படி RO வில் இருந்து வெளியான நீருடன் சாதாரண நீரும் கலந்து வெளியில் வரும்.
ஆரம்பத்தில் இவர்களினுடைய அமைப்பை ஆசிரியர்களின் வீடுகள், நண்பர்களின் வீடுகள் போன்ற இடங்களில் சோதித்து பார்த்திருக்கிறார்கள். அப்போது வரக்கூடிய பிரச்சனைகளை ஆராய்ந்து அதனை சரி செய்துகொண்ட மாணவர்கள் பள்ளியின் அனுமதியோடு இந்த அமைப்பை பள்ளியில் நிறுவி இருக்கிறார்கள்.
அடுத்தகட்டமாக பொது இடங்களிலும் இந்த அமைப்பை நிறுவ தயாரானார்கள் பள்ளி மாணவர்கள். அதன்படி நிறுவப்பட்ட அமைப்புகளில், தமிழ்நாடு தோசை கார்னர் கடையில் ஒரு நாளைக்கு 900 லிட்டர் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு நாளைக்கு 300 லிட்டர், மற்றும் சில இடங்களில் நிறுவப்பட்ட அமைப்பில் இருந்து 600 லிட்டர் என தண்ணீர் சேமிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மாணவர்களின் இந்த அமைப்பிற்கு பெரிய அளவில் ஆதரவு கிடைத்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் இந்த அமைப்பை உருவாக்குவதற்கு 1000 ரூபாய் தான் செலவாகும் என்றாலும் கூட கொரோனா பிரச்சனை முடிவடைந்துவிட்டால் அதிகப்படியான எண்ணிக்கையில் உருவாக்கும் போது செலவு இன்னும் குறையும் என்கிறார் அர்ஜுன்.
இந்த மாணவர்களை வெகு அதிகமாக பாராட்டிய பள்ளி நிர்வாகத்தினரும் ஆசிரியர்களும் விரைவில் மாணவர்களின் கண்டுபிடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் எனவும் காப்புரிமை கிடைக்கும் பட்சத்தில் வணிக ரீதியாக இந்த அமைப்பை உருவாக்கி பொதுமக்களுக்கு விற்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறுகிறார்கள்.
சமூகத்தில் நிலவும் ஒரு எளிமையான அதே சமயம் அதிகப்படியான பாதிப்பை உண்டுபண்ணக்கூடிய பிரச்சனையை கையிலெடுத்து அதற்கு தீர்வும் கண்டிருக்கும் இந்த மாணவர்களுக்கு பாராட்டுக்கள்.
கொரோனா பிரச்சனை காரணமாக கிடைத்திருக்கும் இந்த நேரத்தை ஓய்வு நேரமாக கருதாமல் மாணவர்கள் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் நிகழ்த்திட பயன்படுத்தலாம்.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.