Site icon Tech Tamilan

உலகிலேயே மிகப்பெரிய டெலெஸ்கோப் பற்றி தெரியுமா? | FAST டெலெஸ்கோப் | சீனா அசத்தல்

தற்சமயம் உலகில் இருப்பவைகளிலேயே மிகப்பெரிய டெலெஸ்கோப் என்ற பெருமையை பெறுகிறது 2016 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட சீனாவின் FAST டெலெஸ்கோப். சீன அறிவியலாளர்கள் பல கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதற்கு இந்த டெலெஸ்கோப் உதவும்

Five-hundred-meter Aperture Spherical Telescope

தற்சமயம் உலகில் இருப்பவைகளிலேயே மிகப்பெரிய டெலெஸ்கோப் என்ற பெருமையை பெறுகிறது 2016 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட சீனாவின் FAST டெலெஸ்கோப். சீன அறிவியலாளர்கள் பல கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதற்கு இந்த டெலெஸ்கோப் உதவும்


அறிவியல் கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதற்கு அறிவியல் உபகரணங்கள் அவசியம். சில அறிவியல் உபகரணங்களை விஞ்ஞானிகள் தாங்களாகவே கூட நிறுவிக்கொள்வது உண்டு. ஆனால் ஒரு டெலெஸ்கோப் விலை 180 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என இருந்தால் அதனை எப்படி ஒரு தனி அறிவியல் அறிஞரால் அமைக்க முடியும்? அரசு அல்லது மிகப்பெரிய தனியார் நிறுவனம் நினைத்தால் மட்டுமே முடியும். அதுவும் அறிவியலின் முக்கியத்துவம் உணர்ந்த அரசுகளால் மட்டுமே முடியும்.

உலகில் பல நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் அக்கறை செலுத்தி வருகின்றன. இதில் சீனாவின் பங்கு அளப்பரியது. அவர்கள் தான் தற்போது உலகின் மிகப்பெரிய டெலெஸ்கோப் FAST ஐ வடிவமைத்து இருக்கிறார்கள். 500 மீ விட்டம் அதாவது அரை கிலோமீட்டர் அகலம் கொண்ட இந்த FAST டெலெஸ்கோப் மூலமாக பிரபஞ்சம் பற்றிய ஏராளமான கேள்விகளுக்கு பதில் கண்டறிய முடியும் என கூறுகிறார்கள் அறிவியலாளர்கள்.

FAST டெலெஸ்கோப் பற்றிய சில முக்கியத்தகவல்கள் உங்களுக்காக இங்கே!

1. மிகப்பெரியது : FAST க்கு முன்னதாக உலகில் இருந்த மிகப்பெரிய டெலெஸ்கோப் அரேசிபோ [Arecibo]. இது 305 மீட்டர் விட்டமுடையது. 1960 முதல் மிகப்பெரிய டெலெஸ்கோப் என்ற சாதனையை தன்னகத்தே வைத்திருந்த அரேசிபோ தற்போது இரண்டாம் இடத்திற்கு நகர்ந்திருக்கிறது. 500 மீ விட்டமுடைய FAST டெலெஸ்கோப் தான் தற்போது உலகின் மிகப்பெரிய டெலெஸ்கோப். அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளுக்கு இந்த சாதனையை யாராலும் உடைக்க முடியாது என நம்பப்படுகிறது.

2. உயிரினம் இருக்கிறதா? : பிரபஞ்சத்தில் நம்மைப்போன்ற உயிரினம் எங்கேயேனும் இருக்கிறதா என்பது தான் தற்போது அறிவியலாளர்கள் மத்தியில் நிலவுகிற பொதுவான கேள்வி. அதனை கண்டறிவதற்காகவே பல நாடுகள் கடும் முயற்சி செய்து வருகின்றன. அந்த வகையில் பிரபஞ்சத்தில் உயிரினம் இருக்கிறதா என்பதனை அறிவதில் தற்போது இருக்கக்கூடிய சாதனங்களை காட்டிலும் 5 முதல் 10 மடங்கு சிறப்பாக செயல்படக்கூடியது FAST டெலெஸ்கோப் என கூறப்படுகிறது.

3. அதிக உணர்திறன் :  அரேசிபோ [Arecibo] வை விட இரண்டு மடங்கு அதிக உணர்திறன் [sensitive] கொண்டது  FAST டெலெஸ்கோப். ஆகவே தற்போதைய அளவைவிடவும் 5 மடங்கு முதல் 10 மடங்கு வரைக்கும் வேகமாக நமது தேடல்களை மேற்கொள்ள முடியும் என சொல்லப்படுகிறது. கூடுதலாக பல்சர்கள், மற்றும் ஈர்ப்பு அலைகள் [pulsars and gravitational waves] ஆகியவற்றை ஆராய்வதிலும் பெரும் பங்கு ஆற்றும் FAST டெலெஸ்கோப்

4. 4450 முக்கோண பேனல்கள் : இதுதான் FAST டெலெஸ்கோப் கட்டுமானத்தில் இருக்கக்கூடிய முக்கியமான சிறப்பம்சம். 500 மீ விட்டமுடைய இந்த FAST டெலெஸ்கோப் 4450 முக்கோண வடிவ பேனல்களால் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தேவைப்படும் போது அந்த பேனல்களை குறிப்பிட்ட கோணத்தில் நகர்த்தி விண்வெளியில் குறிப்பிட்ட இடத்தில் கவனத்தை செலுத்தி ஆராய முடியும்.

5. அமைந்துள்ள இடம் : ரேடியோ அலைகளை கிரகித்து ஆராய்வதற்காகத்தான் FAST டெலெஸ்கோப் அமைக்கப்பட்டு இருக்கிறது.  ஆகவே அதன் அருகில் எந்தவித தொந்தரவும் இல்லாத விதமாக வீடுகள், மக்கள் நடமாட்டம் எதுவும் இல்லாத வகையில் பார்த்துக்கொள்ளப்படுகிறது. கிட்டத்தட்ட 9000 பேர் இதனால் மாற்று இடங்களுக்கு நகர்த்தப்பட்டிருக்கிறார்கள். 5 கிலோமீட்டர் தாண்டித்தான் ஊர்களே வரும்

6. உலக சாதனை : கிட்டத்தட்ட $180 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவழித்து கட்டப்பட்டுள்ள இந்த FAST டெலெஸ்கோப் தான் தற்போது உலகில் இருக்கக்கூடிய டெலெஸ்கோப்களிலேயே மிகப்பெரியது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னகத்தே இந்த சாதனையை வைத்திருந்த அரேசிபோவின் சாதனையை தகர்த்துவிட்டது. அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளுக்கு இதுவே மிகப்பெரிய டெலெஸ்கோப் எந்த சாதனையை வைத்திருக்கும்.

7. சீன அறிவியாளர்களை முன்னோக்கி கொண்டு செல்லும் : போர்க்களத்தை விடவும் விண்வெளி கண்டுபிடிப்பில் யார் பெரியவர் என்பது தான் தற்போது நாடுகளிடையே நிலவும் பெரும் போட்டி. அந்த வகையில் பல்வேறு விஞ்ஞான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திட FAST டெலெஸ்கோப் நிச்சயமாக சீன விஞ்ஞானிகளுக்கு உதவும். வெளிநாட்டு விஞ்ஞானிகளும் FAST டெலெஸ்கோப்பை பயன்படுத்தலாம் என்றாலும் கூட அதிக நேரமும் முக்கியத்துவமும் சீனர்களுக்கு தான் அதிகம் வழங்கப்படும்.



Get updates via whatsapp





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version