டேனியல் கே இனூய்
உலகிலேயே அதிக திறன் வாய்ந்த டேனியல் கே இனூய் சூரிய தொலைநோக்கி செயல்பட துவங்கி இருப்பதனால் சூரியனை பற்றிய ஆராய்ச்சிகளும் விண்வெளி சார்ந்த அறிவியல் துறையிலும் மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும் என கருதப்படுகிறது.
பூமியில் இருந்து கிட்டத்தட்ட 15 கோடி கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் 14 லட்சம் கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட சூரியனை இதுவரைக்கும் இல்லாத வகையில் தெளிவாக புகைப்படம் எடுத்திருக்கிறது டேனியல் கே இனூய் எனும் சூரிய தொலைநோக்கி. அறிவியல் துறையில் மிகப்பெரிய மைல்கல்லாக இந்த நிகழ்வு அமையும் என அறிவியல் உலகமே கூறிவருகிறது. தங்கத்தை உருக்கினால் எப்படி அதன் மேற்பரப்பு இருக்குமோ அதேபோன்றதொரு தோற்றமளிக்கும் சூரியனின் மேற்பரப்பு அண்மையில் பகிரப்பட்டதை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்தப்பதிவில் டேனியல் கே இனூய் சூரிய தொலைநோக்கி மற்றும் அதன் மூலமாக மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி எதிர்கால உலகிற்கு எவ்வளவு முக்கியமானவை என்பதை பார்ப்போம்.
DKIST – டேனியல் கே இனூய் சூரிய தொலைநோக்கி
ஹவாய் தீவில் இருக்கும் ஹலேகலா ஆய்வகத்தில் தான் உலகின் மிகப்பெரிய சூரிய தொலைநோக்கி நிறுவப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இந்த தொலைநோக்கியை உருவாக்கும் பணிகள் நடந்தேறின. 344 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இந்த தொலைநோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொலைநோக்கியின் லென்ஸ் விட்டம் [aperture] 4 மீட்டர் நீளமுடையது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சோதனை முயற்சியாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகிய சூழலில் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தான் கட்டுமான பணிகள் நிறைவடைந்தன.
ஏற்கனவே இருந்த சூரிய தொலைநோக்கியை விடவும் இந்தப்புதிய தொலைநோக்கி இரண்டு மடங்கு பெரியது. இந்த தொலைநோக்கியை அமைப்பதற்கு நிதியினை தேசிய அறிவியல் அமைப்பு தான் வழங்கியது, பல்வேறு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்துதான் இந்த அமைப்பு உருவாகி இருக்கிறது.
இந்த தொலைநோக்கியின் திறன் எப்படிப்பட்டது எனில் மிகப்பெரிய சூரியனை 35 கிலோமீட்டர் பரப்புவரை நம்மால் ஜூம் செய்து இந்த தொலைநோக்கியால் பார்க்க முடியும். தற்போது வெளியாகி இருக்கக்கூடிய புகைப்படத்தில் ஒரு செல் போன்ற அமைப்பு மட்டும் டெக்சாஸ் மாகாணத்தை விட பெரியதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த அளவிற்கு அருகாமையில் பார்ப்பதே மிகப்பெரிய வெற்றி தான்.
சூரியனை பற்றிய ஆராய்ச்சி ஏன் முக்கியம்?
நமக்கு அருகாமையில் இருக்கும் மிகப்பெரிய ஆற்றல் மூலம் எது என பார்த்தால் அது சூரியன் தான். சூரியனால் தான் நம்முடைய பூமியின் இயக்கம் நடைபெறுகிறது என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதுபோலவே சூரியனில் நிகழும் மாற்றங்களினால் நமக்கு ஆபத்தும் இருக்கிறது என்பதும் உண்மை தான்.
சூரியனின் காந்தப்புலம் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும் சூரியனின் மேற்பரப்பை விட கரோனா ஏன் அதிக சூடாக இருக்கிறது என்பது போன்ற ஆராய்ச்சிகளை செய்வதற்கும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்கி உதவும். அண்மையில் வெளியிடப்பட்ட புகைப்படத்தை பார்க்கும் போது வெப்பம் உள்ளிருந்து வெளிவருகிறது, மஞ்சள் நிற பகுதிகள் அதிக வெப்பம் உள்ள பகுதிகளாகவும் கறுப்பு நிற எல்லைக்கோடுகள் குளிர்ந்த பகுதி என்பதை வெளிப்படுத்துகிறது. சூரியனின் காந்தப்புலம் எப்படி மாறுதல் அடைகிறது, கொரோனா எப்படி மாற்றமடைகிறது என்பவற்றோடு நாம் இதுவரை சூரியனைப்பற்றி தெரிந்துகொள்ளாத பல விசயங்களை தெரிந்துகொள்ளவும் இந்த தொலைநோக்கி பயன்படும்.
சூரியனின் மேற்பரப்பில் நிகழும் சூரியப்புயல்களின் போது வெளிப்படும் கதிர்வீச்சு பூமியில் தற்போது நாம் பயன்படுத்துகிற தொலைதொடர்பு, மின்சார மூலங்கள் போன்றவற்றை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டவை. ஆகவே அவற்றின் செயல்பாடுகளை முன்கூட்டியே ஆராய்ந்து தெரிந்துகொள்வது அவசியமான ஒன்று. சூரியனைப்பற்றிய ஆராய்ச்சியில் நாம் இன்னும் பல ஆண்டுகள் பின்னோக்கியே இருக்கிறோம் என்பது அறிவியலாளர்களின் கருத்து.
Click Here! Get Updates On WhatsApp
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.