டிக் டாக் ஆப்பானது கலாச்சாரத்தை சீர்குலைக்கின்ற விதமாகவும் [Degrading Culture] பாலியல் விசயங்களை ஊக்குவித்து [encouraging pornography] அதன் மூலமாக பாலியல் குற்றங்களுக்கு காரணமாகவும் இருக்கிறது. மேலும் பிறருக்கு தொந்தரவு கொடுக்கிற தகவல்களையும் சமூகத்திற்கு களங்கம் விளைவிக்கக்கூடிய விசயங்களையும் இளைஞர்களுக்கு மருத்துவரீதியான பிரச்சனைகளை உருவாக்கிடும் படியும் இருப்பதனால் டிக் டாக் ஆப்பிற்கு தடை விதிக்கப்படுவதாக கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை டிக் டாக் ஆப்பிற்கு தடை விதித்தது. மத்திய அரசிற்கு அளித்த உத்தரவில் டிக் டாக் ஆப் டவுன்லோட் செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தது. இதனை தொடர்ந்து Playstore இல் இருந்தும் டிக் டாக் ஆப் நீக்கப்பட்டது.
இதற்கிடையே டிக் டாக் ஆப்பானது விதிமுறைகளுக்கு உட்படாத 6 மில்லியன் வீடியோக்களை நீக்கியது. அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட வயதுடைய நபர்கள் மட்டுமே டிக் டாக் ஆப்பில் கணக்கை துவங்க முடியும் என்பதை உறுதி செய்ய age – gate வசதியை கொண்டுவந்துள்ளது. புதிய விதிமுறையின்படி 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே டிக் டாக் இல் கணக்கினை துவங்கிட முடியும். குறைந்த வயதுடையவர்கள் டிக் டாக் ஆப் பயன்படுத்துவதனை தடுக்க போதிய பாதுகாப்பு மேம்பாடுகளை செய்து வருவதாக டிக் டாக் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதன் மூலமாக தங்களது பயனாளர்களுக்கு பாதுகாப்பான வசதியினை வழங்க முடியும் என நம்புகிறது டிக் டாக்.
தங்களுடைய வாதத்தை கேட்காமலேயே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை டிக் டாக் ஆப்பிற்கு தடை விதித்துவிட்டது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது டிக் டாக் நிறுவனம். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் டிக் டாக் நிறுவனத்தின் வாதத்தையும் கேட்டு இறுதி உத்தரவு பிறப்பிக்குமாறு அறிவுறுத்தியது.
இதனை தொடர்ந்து வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை டிக் டாக் ஆப்பிற்க்கான தடையை நீக்கி உத்தரவிட்டது. பாலியல் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் டிக் டாக் ஆப்பில் பதிவேற்றம் செய்ய அனுமதிக்க கூடாது எனவும் மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை சந்திக்க நேரிடும் எனவும் கூறி இருக்கிறது.
நிச்சயமாக மற்ற சமூக வலைத்தளங்களுக்கும் இந்த தடையும் உத்தரவும் மிகப்பெரிய எச்சரிக்கையாக அமையும்.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.