Features of Android Q OS
பூமியில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு சிறப்பியல்பு இருக்கும். கடலோர பறவை ஒன்று தரைப்பகுதியே இல்லாத பசிபிக் கடல் மீது 7500 மைல் [12 ஆயிரம் கிலோமீட்டர்] தூரம் பறந்து சாதனை படைத்திருக்கிறது. சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு இரண்டு முறை ஓய்வே இல்லாமல் பறந்து செல்வதற்கு ஒப்பானது இந்தத்தொலைவு.
1. படத்தில் காணப்படும் இந்தப் பறவைகள் [bar-tailed godwit] இடப்பெயர்வுகள் நடைபெறும் போது அதிக தூரங்களுக்கு ஓய்வே எடுக்காமல் பறப்பது வழக்கமான ஒன்று. ஆகவே தான் அலாஸ்க்காவில் இருந்து நியூஸ்லாந்துக்கு இடம்பெயரும் இந்தப் பறவைகளை கவனிக்க ஆரம்பித்தார்கள் விஞ்ஞானிகள். அப்போது தான் சுமார் 7500 மைல் தொலைவை ஒரு ஆண் பறவை ஒன்று ஓய்வே எடுக்காமல் கடந்திருந்தது. இது உலக சாதனை.
2. Global Flyway Network என்ற அமைப்பு கடலோரப்பறவைகள் எப்படி இடம்பெயர்வு செய்கின்றன என்பதனை ஆராய சில பறவைகளின் கால்களில் குறிப்பிட்ட வண்ணங்களால் ஆன பேண்டுகளை கட்டியது. அதில் கால்களில் 4BBRW [ இரண்டு நீல, ஒரு சிகப்பு, ஒரு வெள்ளை பேண்டுகள்] கட்டப்பட்ட பறவையின் மீது டிராக்கிங் கருவி [satellite tag] ஒன்றும் பொருத்தப்பட்டது. இதிலிருந்து பெறப்பட்ட தகவலின்படி குறிப்பிட்ட அந்தப்பறவை 55 மைல் வேகத்தை அடைந்திருக்கிறது. அதேபோல 11 நாட்கள் இடைவிடாமல் உறங்காமல் பறந்தும் இருக்கிறது.
3. 2007 ஆம் ஆண்டு இதே இனத்தை சேர்ந்த பெண் பறவை ஒன்று இடைவிடாமல் 7250 மைல் தூரத்தை கடந்ததே சாதனையாக இருந்தது. வலிமையான எதிர்க்காற்று இந்த ஆண் பறவையை நீண்ட தூரம் பயணிக்க கட்டாயப்படுத்தியுள்ளதால் புதிய சாதனையை படைத்திருக்கிறது இந்த ஆண் பறவை.
4. பொதுவாக இந்தப்பறவைகள் கோடைகாலத்தை ஆர்டிக் பகுதியில் கழிக்கின்றன. அங்கே கரையில் ஒதுங்கும் சிறு மீன்கள், புழுக்கள் ஆகியவைகளை உண்டு தனது எடையை இருமடங்காக அதிகரித்துக்கொள்கின்றன. இதில் பெரும்பகுதி கொழுப்பாகவே இருக்கும். மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய தேவை இருக்கும் என்பதனால் பறக்கும் நேரத்தில் தன் உடலில் இருக்கும் வயிறு மற்றும் ஈரல் போன்ற உறுப்புகளை சுருக்கிக்கொள்கின்றன.
5. பறவைகள் பறக்க தயாரானவுடன் அலாஸ்காவில் இருந்து பறக்கத்துவங்கி நியூஸ்லாந்தை நோக்கி பயணிக்கின்றன. அங்கே குளிர்காலத்தை எதிர்நோக்கி இந்தப்பறவைகள் பல ஆயிரம் மைல்களை பறந்தே கடக்கின்றன.
6. இந்தப்பறவைகளின் உடல் அமைப்பு சண்டையிடும் ஜெட் விமானத்தின் அமைப்பு போல நீண்ட, கூர்மையான இறக்கை, நேர்த்தியான உடல் அமைப்பு ஆகியவற்றை பெற்று இருப்பதனால் மிக நீண்ட தூரம் அவைகளால் பயணிக்க முடிகிறது.
7. தரையிறங்கவோ அடையாளம் அறியவோ எந்தவொரு நிலப்பரப்பும் இல்லாத கடலின் மேற்பரப்பில் நாள்கணக்கில் பறந்து செல்லும் இந்தப்பறவைகள் தங்களுக்குள் ஒரு வரைபடத்தை வைத்திருக்கலாம் அல்லது பூமியின் காந்தப்புலத்தை உணரும் ஒரு உள்ளமைப்பை இந்தப்பறவைகள் கொண்டிருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இரண்டு கிலோமீட்டர் நடந்தாலே ஓய்வு தேவைப்படும் நமக்கு மத்தியில் ஒரு பறவை சிறிதும் ஓய்வில்லாமல் தூங்காமல் 12 ஆயிரம் கிலோமீட்டர் பறந்து செல்கிறது என்பது இயற்கை அதிசயமே.
மீண்டும் ஒரு ஆச்சர்ய பதிவில் சந்திப்போம்.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.