Site icon Tech Tamilan

“கருப்பை தொழிற்சாலை” – மனித இனத்தின் அழிவிற்கு வித்திடுமா? | Artificial womb facility

மூலக்கூறு உயிரி தொழில்நுட்பவியலாளர் ஹஷேம் அல்-கைலி என்பவரால் வெளியிடப்பட்ட செயற்கை கருப்பை தொழிற்சாலை வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த வீடியோவின்படி, தாயின் கருப்பையில் குழந்தை வளர்வதற்கு மாற்றாக செயற்கையாக தயாரிக்கப்பட்ட growth pods இல் கருவை வளர செய்து முழு வளர்ச்சி அடைந்த குழந்தையை ஒரு பட்டனை அழுத்தி பிறக்க செய்திட முடியும். இது குழந்தையின்மை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என்பது ஒரு சாராரின் கருத்தாக இருக்கிறது. இன்னொரு பக்கம், இது மனித இனத்தின் அழிவிற்கே வித்திடும் எனவும் சொல்லப்படுகிறது. எது உண்மை? இந்த தொழில்நுட்பம் எப்படி வேலை செய்யும்? இதனால் என்ன நன்மை தீமைகள் உண்டாகும்? வாருங்கள் விரிவாக பார்ப்போம்.

Artificial womb facility அல்லது கருப்பை தொழிற்சாலை என்றால் என்ன? 

மனிதர்கள் துவங்கி ஒவ்வொரு உயிரினமும் தாயின் கருப்பையில் வளர்ந்து தான் பிறக்கிறது. ஆனால், தாயின் கருப்பையை போன்றதொரு அமைப்பை செயற்கையாக உருவாக்கி அங்கே கருவை வளர செய்து குழந்தையை செயற்கை முறையில் பிறக்க செய்வது தான் கருப்பை தொழிற்சாலை [Artificial womb facility] என அழைக்கப்படுகிறது.

இந்த அமைப்பு முழுவதுமே தாயின் கருவறையில் என்னென்ன வசதிகள் உள்ளனவோ அதே வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு, தாயின் கருவறையில் உள்ள வெப்பநிலை, திரவ அமைப்பு அப்படியே இங்கேயும் இருக்கும். உணவு உள்ளிட்டவை அனைத்தும் கருப்பையில் உள்ளது மாதிரியே தொப்புள்கொடி வாயிலாக அனுப்பப்படும். அதேபோல, வெளியேற்றப்பட வேண்டிய பொருள்கள் வெளியேறவும் வசதிகள் செய்யப்பட்டு இருக்கும். செயற்கை கருவறையில் வளரும் குழந்தையின் வளர்ச்சி முழுமையாக கண்காணிக்கப்படும். முழு வளர்ச்சியை எட்டியவுடன் ஒரு பட்டனை அழுத்தி குழந்தை வெளி உலகிற்கு கொண்டுவரப்படும்.

கருப்பை தொழிற்சாலை மூலமாக மனித குழந்தைகளை பெற்றெடுக்க முடியுமா?

இது சாத்தியம் தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆனால், இப்போதைக்கு இது இன்னும் கண்டறியப்படவில்லை. 

2012 ஆம் ஆண்டு வாக்கில் இஸ்ரேலிய விஞ்ஞானிகள் செயற்கை கருப்பை முறையில் எலிகளை உருவாக்கினார்கள். 2017 ஆம் ஆண்டுவாக்கில் ஆட்டுக்குட்டியை செயற்கை கருப்பை முறையில் உருவாக்கி சாதனை படைத்து இருந்தார்கள். அப்போதே, அடுத்தது மனிதர்கள் தான் என்ற பேச்சு எழுந்தது. இப்போது மீண்டும் அது பேசுபொருளாக மாறியுள்ளது. 

 ஹஷேம் அல்-கைலி என்ற ஆய்வாளர் ஒருவரால் வெளியிடப்பட்டுள்ள செயற்கை கருப்பை தொழிற்சாலை பற்றிய வீடியோ தான் தற்போது இன்டர்நெட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த வீடியோவில் இருப்பது உண்மையான கருப்பை தொழிற்சாலை இல்லை. மாறாக இது ஒரு செயல்விளக்க வீடியோ தான் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், மனித குழந்தைகளை செயற்கை முறையில் பெற்றெடுக்க தேவையான ஆய்வுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன என்பதை நாம் மறுக்கவும் முடியாது. 

அந்த செயல்விளக்க வீடியோவில் தெரிவித்துள்ள விசயங்களின் அடிப்படையில் பார்த்தால், ஒரு இடத்தில் சுமார் 30,000 குழந்தைகளை செயற்கை முறையில் பெற்றெடுக்க முடியும். அதன்படி, ஒரு ஆணின் விந்தணுவும் பெண்ணின் கருமுட்டையும் இயற்கையான முறையில் ஒன்றிணைக்கப்படும். இது மட்டுமே இதில் இயற்கையானதாக இருக்கும். கரு உருவானவுடன் கருவானது செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள செயற்கை கருப்பைக்கு மாற்றப்படும். அங்கே கரு வளர்வதற்கு ஏற்ற வெப்பநிலை, சூழ்நிலை அனைத்தும் உருவாக்கப்பட்டு இருக்கும். 

குழந்தைக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து ஊட்டச்சத்துக்கள் அனைத்துமே செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள தொப்புள்கொடி மூலமாக குழந்தைக்கு அனுப்பப்படும். கழிவுப்பொருள்களை அகற்றவும் தனித்துவமான அமைப்பு இருக்கும். குழந்தையின் வளர்ச்சி துல்லியமாக கண்காணிக்கப்படும். 

குழந்தை முழு வளர்ச்சியை எட்டியவுடன் ஒரு பட்டனை அழுத்தினால் போதும் குழந்தையை பெற்றெடுத்து விடலாம்.

கருப்பை தொழிற்சாலை நல்லதா?

குழந்தை பிறப்பு குறைவு

ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் என்பது தொடர்ச்சியாக குறைந்து வருகின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், அப்படி குறைந்த குழந்தை பிறப்பு விகிதம் உள்ள நாடுகளுக்கு செயற்கையான கருப்பை தொழிற்சாலை பெரிய அளவில் உதவுயாக இருக்கும் என இதற்கு ஆதரவானவர்கள் தெரிவிக்கிறார்கள். 

குழந்தையின்மை பிரச்சனை

ஆண்களின் விந்தணு குறைபாடு உள்ளிட்ட பல காரணங்களால் குழந்தையின்மை பிரச்சனை என்பது தலைதூக்கி உள்ளது. ஆண்களும் பெண்களும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. இப்போதைய சூழலில் உலக அளவில் 15% பேருக்கு குழந்தையின்மை பிரச்சனை உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தக்குறைபாட்டை நிவர்த்தி செய்திட இப்படிப்பட்ட செயற்கையான கருப்பை தொழிற்சாலை பெரிய அளவில் உதவி செய்யும் என சொல்லப்படுகிறது. 

ஜீன் குறைபாடுகளை தவிர்க்காலம் :

வெறுமனே குழந்தைகளை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல் குழந்தை வளர்ச்சியில் சில மாறுதல்களையும் இதிலே செய்திட முடியுமாம். அதன்படி, ஒரு குழந்தைக்கு பிறப்பு வாயிலாக ஒரு ஜீன் குறைபாடு வருகிறது என்றால் அதனை இந்த முறையில் பிறக்கும் குழந்தைக்கு சரிசெய்திட முடியும். அதேபோல சில தேர்வுகளையும் பெற்றோர்கள் செய்திடும் விதத்திலான வசதிகள் இதில் இருக்குமாம். 

தாய்மார்கள் இறப்பு தவிர்க்கப்படும் :

உலக அளவில் குழந்தை பிரசவிக்கும் போது பல தாய்மார்கள் இறந்து போகிறார்கள். ஆனால், செயற்கை கருப்பை மூலமாக குழந்தைகளை வளர்க்கும் போது அந்த மாதிரியான பிரச்சனைகளை தவிர்க்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதேபோல, எந்தவித பிரசவ வலியையும் பெண்கள் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படாது.

கருப்பை தொழிற்சாலை ஓர் அபாயகரமான கண்டுபிடிப்பு என எச்சரிக்க என்ன காரணம்? 

கருப்பை தொழிற்சாலையால் பல நன்மைகள் இருப்பதாக சொல்லப்பட்டாலும் கூட, இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கிறார்கள் ஆய்வாளர்கள். 

ஒரேவிதமான குழந்தைகள் : கருப்பை தொழிற்சாலையில் உருவாக்கப்படும் குழந்தைகளுக்கு சில தேர்வுகளை பெற்றோர்களால் செய்துகொள்ள முடியும் என்பதனால் ஒரே மாதிரியான குழந்தைகள் பிறக்க வாய்ப்பு உண்டு என எச்சரிக்கை விடுகிறார்கள். 

நோய் எதிர்ப்பு சக்தி குறையும் : ஒரே சூழலில் குழந்தைகள் வளர்க்கப்படும் என்பதனால் ஒரே மாதிரியான சூழலுக்கு பழக்கமான விதத்தில் தான் குழந்தைகள் பிறக்கும். ஒருவேளை புதிய சூழல் மாற்றங்கள், அபாயங்கள், நோய் பாதிப்புகள் ஏற்பட்டால் அனைத்து குழந்தைகளுக்கும் அந்த பேராபத்து பாதிப்பை ஏற்படுத்தும். இது மனித இனமே அழிவதற்குக் கூட காரணமாக அமைந்துவிடும். 

தாய் – சேய் இணைப்பு : குழந்தைக்கும் தாய்க்குமான பிணைப்பு கருவறையில் சுமக்கும் போது தான் ஏற்படுகிறது. தாயின் கருவறைக்கு வெளியே உள்ள ஒரு இடத்தில் குழந்தை வளர்க்கப்பட்டால் இந்த பிணைப்பில் குறைபாடு ஏற்படும். அதேபோல, தாய்ப்பால் உள்ளிட்ட விசயங்களிலும் பெரிய சிக்கல்கள் உண்டாகும். 

நாம் என்னதான் குறைபாடுகளை சுட்டிக்காட்டினாலும் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் வருவதை யாராலும் தவிர்க்க முடியாது. ஆகவே, விரைவில் இந்த தொழில்நுட்பமும் நமது உலகில் வந்தே தீரும். ஒருவேளை, இந்தத் தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வந்தால் வேறு கிரகங்களில் நாம் குடியேறினால் அங்கே புதிய மனிதர்களை உருவாக்க இந்தத் தொழில்நுட்பம் பெரிய அளவில் உதவியாக இருக்கும்.

Exit mobile version