Site icon Tech Tamilan

23 வயது பொறியாளர் மின்சாரம் மற்றும் நீர் இரண்டையும் உருவாக்கக்கூடிய காற்று டர்பைனை உருவாக்கியுள்ளார்

andhra-pradesh-engineer-innovation-wind-turbine-generates-electricity-drinking-water

Electric Turbine

ஆந்திராவை சேர்ந்த மது வஜ்ரகூர் எனும் 23 வயது இளைஞர், எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மாணவர் மின்சாரம் மற்றும் நீர் இரண்டையும் உருவாக்கக்கூடிய டர்பைனை [Turbine] உருவாக்கியுள்ளார். அத்தியாவசிய தேவையாக இருக்கக்கூடிய இரண்டையும் ஒரே கண்டுபிடிப்பில் உருவாக்கியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் கூட சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். இந்தியாவில் பல்வேறு காரணங்களால் 88 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. அந்தப்பலரில் ஒருவர் தான் ஆந்திராவை சேர்ந்த எலெட்ரிக்கல் இன்ஜினியரிங் பயிலும் மாணவர் மது வஜ்ரகூர். இவர் இருக்கும் கிராமத்தில் குடிநீர் இரண்டு வழிகளில் கிடைக்கிறது. ஆழ்துளை போர்வெல் மூலமாகவோ அல்லது டேங்கர் லாரிகள் மூலமாகவோ அவர்கள் குடிநீரை பெறலாம். போர்வெல் மூலமாக பெறுகிற நீரையும் காய்ச்சி சுத்தப்படுத்திய பின்னர் தான் குடிக்க பயன்படுத்த முடியும். மழை பொய்த்திடும் நேரங்களில் நீர் மட்டம் குறைந்து போகும் ஆகவே குடிநீரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலையே நிலவும்.

இதற்கு ஒரு முடிவு கட்ட விரும்பிய இளம் பொறியாளர் தன் வீட்டின் பின்பக்கத்தில் ஒரு டர்பைனை நிறுவினார். அதன் மூலமாக மின்சாரம் மற்றும் குடிப்பதற்கு உகந்த தூய்மையான குடிநீர் இரண்டும் கிடைக்கிறது.

15 அடி உயரமுள்ள இந்த டர்பைன் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறுஞ்சுகிறது. உறிஞ்சப்படும் ஈரப்பதமானது  காப்பர் குழாய்களின் மூலமாக அனுப்பப்படும். குளிர்சாதன பெட்டி அமைப்பின் பின்பக்கத்தில் இருக்கும் காப்பர் குழாய் அமைப்பு போன்றே இதுவும் இருக்கும். பின்னர் சுத்தப்படுத்தும் அமைப்புக்குள் செலுத்தப்பட்டு குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் கிடைக்கும். அப்படி கிடைக்கும் நீரை சேமிக்க 40 லிட்டர் டேங்க் அமைப்பையும் நிறுவியுள்ளார். மேலும் இந்த டர்பைன் 30-kilowatt திறன் கொண்ட இன்வெர்ட்டர் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து வீட்டிலிருக்கும் மின்விசிறி, மின்விளக்கு ஆகியவைகளுக்கு தேவையான மின்சாரம் எடுக்கப்படுகிறது.

அக்டோபரில் இந்த அமைப்பை உருவாக்கத்துவங்கிய இவர் 15 நாட்களில் நண்பர்கள் துணையுடன் செய்து முடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக இந்த அமைப்பை உருவாக்க இவருக்கு ஆன செலவு 1 லட்சம். இந்தத்தொகையை இவர் தனது குடும்பத்திடம் இருந்தும் தனது சேமிப்பில் இருந்தும் பெற்று இந்த அமைப்பை உருவாக்கி இருக்கிறார்.

இந்தத்துறையில் செயல்பட்டுவரும் ஆர்க்கிமிடிஸ் கிரீன் எனர்ஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் சூர்யபிரகாஷ் இந்த அமைப்பு குறித்து தெரிவிக்கும் போது ‘இந்த அமைப்பு உறுதியானது என்று சொல்ல முடியாது, பலத்த காற்றை தாங்கும் என்றும் சொல்ல முடியாது. ஆனால் 30 KW எனர்ஜியை உருவாக்கும் திறன் கொண்ட இந்த டர்பைனை உருவாக்க 35 லட்சம் தேவைப்படும். ஆனால் இவர் 1 லட்ச ரூபாயில் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளது பாராட்டக்கூடிய விசயம்’ என கூறியுள்ளார்.

மது தற்போது உருவாக்கியுள்ள அமைப்பு மூலமாக தினசரி 80 முதல் 100 லிட்டர் வரைக்கும் தூய்மையான குடிநீர் கிடைக்கிறது. இதில் உருவாக்கப்படும் மின்சாரம் காரணமாக மின்கட்டணம் வெகுவாக குறைவதாகவும் இவர் தெரிவித்துள்ளார். இவரைப்பற்றி இவரது நண்பர் குறிப்பிடும் போது மது இப்படியொரு அமைப்பை உருவாக்கியிருப்பதில் பெரிய ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. அவர் படிக்கும் காலத்தில் இருந்தே இதுபோன்ற பயனுள்ள விசயங்களை செய்துகொண்டே தான் இருப்பார் என பாராட்டியுள்ளார்.

உங்கள் பகுதியில் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு அறிவியல் மூலமாக தீர்வு காண முயலுங்கள். நீங்களும் சாதனையாளராக மாறலாம்.

Exit mobile version