Site icon Tech Tamilan

AI ஆல் வேலை இழப்பு ஏற்படும் அபாயம்! உலகம் எப்படி இதை எதிர்கொள்ளப் போகிறது?

இன்றைய உலகின் மிக முக்கியமான பிரச்சனையாக உருவெடுத்து இருப்பது AI எனப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம். ஒருபக்கம் இதன் பயன்பாடுகளால் பெரிய அளவில் வரவேற்பினை பெற்றாலும் கூட மறுபக்கம் இதனால் ஏற்படப்போகும் சிக்கல்களை நினைத்து உலகமே அச்சம் அடைந்து நிற்கிறது. இந்தப்பதிவில் AI ஆல் ஏற்படப்போகும் அபாயங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பறிபோகும் வேலை வாய்ப்பு

தொடர்ச்சியாக மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு வேலையில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இப்படி நிறுவனங்கள் ஆட்குறைப்பு வேலையில் ஈடுபடுவதற்கு “செலவு குறைப்பு” என்பது காரணமாக சொல்லப்பட்டாலும் கூட AI வரவின் காரணமாக மிகப்பெரிய நிறுவனங்களுக்கு பல வேலைகளை செய்வதற்கு இனி மனித சக்தி தேவைப்படாது என்பது தான் உண்மையான காரணம். அந்த நிறுவனங்கள், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதே வேலையை சரியாகவும் வேகமாகவும் குறிப்பிட்ட வேலையை செய்து முடிக்க முடியும். 

இதற்கு சான்றாக IBM நிறுவனத்தின் CEO அரவிந்த் கிருஷ்ணா அண்மையில் பகிர்ந்துள்ள தகவலைக் கூறலாம். அவர் அளித்த தகவலின்படி, குறிப்பிட்ட வேலைகளுக்கு ஆட்கள் எடுப்பதையே அந்நிறுவனம் தற்போது நிறுத்தி வைத்துள்ளது. சுமார் 8000 பேரின் வேலைகளை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்து முடிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்களோடு நேரடியாக தொடர்பில்லாத 30% வேலைகளை AI கொண்டு செய்து முடிக்க முடிவு செய்துள்ள அந்நிறுவனம் குறிப்பிட்ட வேலைகளை செய்வதற்கு ஆட்களை எடுக்கும் பணியை நிறுத்தி வைத்துள்ளது. இதுவொரு துவக்கம் தான் என்பதனை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். 

அதேபோல, இந்தியாவின் பிரபலமான மென்பொருள் தொழில்நுட்ப வல்லுநராகவும் Zoho என்ற நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறவராகவும் இருக்கக்கூடிய ஸ்ரீதர் வேம்பு அவர்கள் AI மென்பொருளான ChatGPT குறித்து கருத்து தெரிவிக்கும் போது, AI மென்பொருள் உருவாக்கும் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் மென்பொருள் உருவாக்கத்தில் ஈடுபடும் பணியாட்களின் வேலையை இந்த AI புரோகிராம்கள் பறிக்க ஆரம்பித்துள்ளன என்றும் கருத்து தெரிவித்து உள்ளார். 

அதேபோல, பெரிதாக எழுதும் திறமை இல்லாதவர்கள் கூட தற்போது கிடைக்கும் AI புரோகிராம்களை பயன்படுத்தி மிகச்சிறப்பாக எழுத முடிகிறது. இது திறமையான கட்டுரையாளர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் சவால்களையும் பணி இழப்பு சிக்கலையும் ஏற்படுத்த துவங்கி உள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

வேலை இழப்பு என்பது அவ்வப்போது ஏற்படக்கூடியது தான் என்றாலும் கூட AI தொழில்நுட்பத்தால் ஏற்படப்போகும் வேலை இழப்பு என்பது நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு இருக்கப்போகிறது என்பது தான் உண்மை. இதனால், IT துறையில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்

அண்மையில், அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸ் முன்னனி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களோடு கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் மிக முக்கியமான நோக்கம், AI தொழில்நுட்பத்தினால் ஏற்படப்போகும் பாதுகாப்பு அச்சுறுத்தல் தான். அமெரிக்க துணை அதிபர் கூகுள், மைக்ரோசாப்ட், ChatGPT யின் பிரதிநிதி உள்ளிட்டோருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் “AI தொழில்நுட்பத்தை தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத விதத்தில் உருவாக்கும் பொறுப்பு அனைத்து நிறுவனங்களுக்கு இருப்பதாகவும், சட்டத்திற்கு உட்பட்டுத்தான் இவற்றை உருவாக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார். 

ஆதரிக்கும் சிலர்

AI தொழில்நுட்பத்தினால் ஏற்படப்போகும் சிக்கல்களை சிலர் வரிசைப்படுத்தினாலும் கூட AI தொழில்நுட்பத்தை வரவேற்போரும் இருக்கவே செய்கிறார்கள். மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய வேலைகளை AI தொழில்நுட்பத்தைக் கொண்டு செய்துவிட்டால் மனித சக்தியை பிற நல்ல வேலைகளை செய்திட பயன்படுத்த முடியும் என்றும் இதனால் மனிதர்களின் திறமை அதிகரிக்கும் என்றும் அவர்கள் காரணம் தெரிவிக்கிறார்கள்.

மக்களே உஷார்

யார் என்ன சொன்னாலும் AI தொழில்நுட்பத்தின் வருகையை நம்மால் தவிர்க்க முடியாது. அதேபோல, அது ஏற்படுத்தப்போகும் தாக்கத்தையும் யாராலும் தடுக்க முடியாது. பெரும் நிறுவனங்கள் தங்களது வருமானத்தை பெருக்கவே நினைப்பார்கள். அப்படி இருக்கும் போது அவர்கள் AI போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தாமல் மனிதர்களுக்கு வேலை வாய்ப்பினை தந்துகொண்டு இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஆகவே, நாம் நமது திறமையை உயர்த்திக்கொள்ள வேண்டிய சூழலில் இருப்பதை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு செயல்பட்டால் AI ஆல் ஏற்படப்போகும் பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.

TECH TAMILAN

Exit mobile version